Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெனிவாவில் மேற்கு நாடுகளின் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அடியோடு நிராகரிப்பு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வின் போது, முன்வைக்கப்பட்ட 210 பரிந்துரைகளில் 98 பரிந்துரைகளை இலங்கை 
அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

குறிப்பிட்டு கூறக்கூடிய, காலக்கெடுவுடனான செயற்திட்டங்கள் மற்றும் அனைத்துலக கண்காணிப்புக்குட்பட்ட அல்லது அனைத்துலக சட்டங்களின் அடிப்படையிலான நடைமுறைகளை பெரும்பாலும் இலங்கை 
அரசு ஏற்கவில்லை. 

இலங்கை அரசின் நேரடி கண்காணிப்புக்குட்பட்ட, குறிப்பிட்ட காலகெடுக்கள் இல்லாத பரிந்துரைகளை மட்டுமே இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

வடக்கில் மீள்குடியேறியவர்களின் நிலங்களை அவர்களுக்கு திரும்ப அளிப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது, இலங்கை 
இராணுவத் தலையீட்டைக் குறைப்பது, வடக்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு வழிசெய்வது போன்ற யோசனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முன்வைத்த பெரும்பான்மையான பரிந்துரைகள் இலங்கை அரசினால் ஏற்கப்படவில்லை. 

சித்திரவதையை தடுப்பதற்கான ஐ.நா நடைமுறைகளை ஏற்க வேண்டும், மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மனிதஉரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான அனைத்துலக சட்டங்களை ஏற்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. 

அத்துடன், இலங்கை மனிதஉரிமைகள் ஆணையத்தை சுதந்திரமான செயற்பாட்டை உறுதி செய்வதற்கான சட்டத்தை கொண்டு வரும் யோசனையையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது. 

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சுதந்திரமான கட்டமைப்பை உருவாக்குவது, கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளையும் இலங்கை நிராகரித்துள்ளது. 

மேலும், இணையதளங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் இலங்கையினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post