ஊழல் புகார்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவற்றைத் தொடர்ந்து, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் மீது அரசியலில் குதித்துள்ள சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேடு புகார் கூறியுள்ளார்.
மேலும், சோனியா, ராகுல் ஆகியோர் 1,600 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத், ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் இந்த குற்றச்சாட்டுகளால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோனியா, பிரதமர் மன்மோகன் சி்ங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட பலர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.