கேள்வித் தாள் வெளியான விவகாரத்தால், ரத்து செய்யப்பட்ட, குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெற உள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறு தேர்வை எழுத முடியும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.
ஒருங்கிணைந்த சார்நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்ய குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-5க்கான 24 பணியிடங்கள், குரூப்-8க்கான 28 பணியிடங்கள் என மொத்தம் 3687 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வை தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 245 தேர்வுக் கூடங்களில் 6 லட்சத்து 41 ஆயிரத்து 209 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 233 பேர் ஆண்கள். 2 லட்சத்து 98 ஆயிரத்து 976 பேர் பெண் தேர்வர்கள். கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 552 பேரும் இந்தத் தேர்வில் பங்கு கொள்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெற்ற குரூப்2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து, மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.