முன்னாள் பெண் போராளியின் பேட்டி தமிழ் தேசியத்தை சிதைக்க எடுக்கப்பட்டது - பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
ஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.
விடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ அல்லது உதவி வழங்கும் அமைப்புக்களிடமோ பகிர்ந்துகொள்ள முனையாது இருந்தது என்பது மிகவும் வேடிக்கை தருகின்றது.
விளம்பரம் இன்றி ஏராளம் முன்னாள் போராளிகளுக்கு நாம் உதவிகளை வழங்கி வருகின்றோம்.அவர்களின் குடும்ப நலனில் நாம் முதல்நிலை அக்கறை செலுத்தி வருகின்றோம்.போரில் தங்கள் குடும்பங்களில் இழப்புக்களை சந்தித்தவர்களின் விபரங்களை பதிவுசெய்யமாறு நாம் பகிரங்கமாக அறிவித்திருந்தோம்.
அதற்கு இணங்க ஏராளம் பேர் காணமல் போனவர்களின் விபரங்களையும் இறந்தவர்களின் விபரங்களையும் வந்து எம்முடன் தொடர்புகொண்டு பதிவுசெய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்கள் எங்கள் ஊடாகவும் தனியாகவும் பெருமளவு உதவிகளை செய்து வருகின்றார்கள்.
இந்த அனுபவம் மிக்க போராளி தன் பிள்ளைகளின் பசி தீர்க்க பாலியல் தொழிலாளியாக மாறியிருப்பதாய் பேட்டி அளித்திருப்பது ஒரு புறத்தில் வறுமையின் கொடிய பிடியிலும் தம் சொந்த முயற்சியால் உழைத்து பி;ள்ளைகளை கல்வி கற்பித்து முன்னேற்றியிருக்கிற முன்னாள் போராளிகளான சகோதரிகளை அவமானப்படுத்துவதாய் அமைகின்றது.
இன்னொரு புறத்தில் இங்கு தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் மீது தவறான கருத்தை உருவாக்கவும் தமிழ்தேசியத்தை சிதைக்கவும் திட்டமிட்டு செய்யப்பட்ட பேட்டியாகவும் எண்ணவும் தோன்றுகின்றது.
நாம் அதிகம் போரில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களில் அக்கறை செலுத்திவருவதையும் அவர்களுக்கு செய்துவருகின்ற உதவிகளையும் அந்த குடும்பங்கள் அறியும்.
எனவே ஆற்றல் மிக்க ஒரு முன்னாள் போராளி எம்மோடு இதுவரையும் தொடர்பு கொண்டு தன் நிலையை தெரிவிக்காமல் இருந்திருப்பதும் வறுமை நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் துரதிஸ்டமானது.
எனவே இனிமேலாவது குறித்த அந்த பெண் போராளி எம்மோடு தொடர்புகொள்ளலாம். அவரின் உண்மை கதையை அறியவும் அவருக்கு உதவவும் நாம் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.
போராளிகளாக இருந்து பின்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்கள் செம்மையாக வாழ்வதே உண்மை. இன்றைக்கும் காணாமல் போன தங்கள் கணவனை தேடி அலைகின்ற பெண்கள் எங்கள் கண்முன்னே இருக்கின்றார்கள்.
எனவே எமது பெண்களின் ஒழுக்கம் இப்படியான பேட்டிகள் மூலம் கேள்விக்குறியாக்கப்படுவது கவலை அழிப்பதுடன் இது திட்டமிட்ட தமிழ் தேசியத்துக்கு எதிரான விசமிகளின் செயலா என சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.
வேலு நாச்சியார் என்றும் ஜான்சிராணி என்றும் புகழப்பட்ட ஒரு முன்னாள் போராளி ஒரு விபச்சாரியாக மாறியிருக்கமாட்டாள் என்பதே எம் ஆழமான நம்பிக்கை என பா.உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.