அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஒபாமாவும், மிட் ராம்னியும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் வளர்ச்சியை முன்வைத்து இருவரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனிடையே ஒபாமா மீண்டும் அதிபராக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறதோ, அதே அளவுக்கு அங்கு நடைபெறும் அதிபர் தேர்தல் மீதான பார்வையும் இருக்கிறது. நாளை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான அதிபர் ஒபாமா, நியூ ஹாம்ப்சயர் மாகாணத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தியவர் ஒபாமா என புகழாரம் சூட்டினார். மேலும், ஆளுநர் ராம்னி பரிந்துரைந்த கொள்கைகளின்படி முந்தைய 7 ஆண்டு ஆட்சியில் 2.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால் ஒபாமா அதிபரான இரண்டரை வருடங்களில் ஐந்தரை மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என ஒபாமாவுக்கு ஆதராவாக பிரசாரம் மேற்கொண்டார்.
மக்களுக்காகவே உழைக்கிறேன் :
இதைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, மக்களுக்காகவே தான் அனுதினமும் உழைப்பதாக கூறினார். முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் தன்னை அதிபராகத் தேர்ந்தெடுக்குமாறு ஒபாமா கேட்டுக்கொண்டார். நான் எங்கு நிற்கிறேன், எதை நம்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உண்மையைப் பேசுவது உங்களுக்குத் தெரியும். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் நான் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே உங்கள் அதிபராக இருக்கக் கூடிய தகுதி எனக்கு உள்ளது என பிரசாரம் செய்தார்.
இதுவரை ஒபாமா செய்தது என்ன ?:
ஜனநாயக கட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல் குடியரசுக் கட்சி வேட்பாளரான மிட் ராம்னி பிரச்சாரம் செய்துவருகிறார். பதவியில் இருக்கும்வரை எதுவும் செய்யாத ஒபாமா, மாற்றத்தை ஏற்படுத்துவேன் என இப்போது கூறுவதை ஏற்கமுடியாது என்றார்.பழைய நிலையே தொடர வேண்டுமா? அல்லது உண்மையான மாற்றம் வேண்டுமா? மாற்றத்தை ஏற்படுத்துவேன் என கூறும் அதிபர் ஒபாமாவால் மாற்றத்தை தரமுடியவில்லை. ஆனால் நான் மாற்றத்தை ஏற்படுத்துவேன். நான் மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்தார்.
மீண்டும் அதிபர்.. ஒபாமா ? :
இதற்கிடையே முன்கூட்டி வாக்களித்த 2 கோடியே 80 லட்சம் பேரில் பெரும்பாலானோர் ஒபாமாவுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராம்னி தரப்பு, வாக்குப்பதிவு நாளன்று விழும் ஓட்டுகள் தான் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் என்கிறது. ஆனால் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தனித்தனியே நடத்திய கருத்துக்கணிப்புகளில் ஒபாமாவே மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.