தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று காவிரி கண்காணிப்பு குழுவில் கர்நாடகா பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் சாகுபடிப்பணிகளை நிறைவு செய்ய ஏதுவாக போதுமான நீர் இருப்பு இல்லாததால், தேவையான நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தமிழகம் கோரியது. இது தொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழுவிடம் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
தமிழகம் தாக்கல் செய்த மனுவில் 52.8 டிஎம்சி தண்ணீர் தேவையென்று கோரப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, தமிழகம் கோரும் நீரின் அளவு காவிரி நதி நீர் ஆணைய உத்தரவுக்கு எதிரானது என கூறியுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் நீரை கர்நாடகா வழங்கினாலே போதும் என்று மத்திய நிபுணர் குழு அறிவுறுத்தியிருப்பதாகவும் கர்நாடகா தனது மனுவில் தெரிவித்துள்ளது.