Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நவம்பர் 6 வைகோ ஆர்ப்பாட்டம்

தமிழகத்தைப் பாழ்படுத்தி நாசமாக்கும் மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழக மக்களை விடுவிக்கவும், வளரும் இளம் தலைமுறையையும், வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கப் ‘பூரண மதுவிலக்கே எமது இலக்கு’ என்று கரூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. மாநாட்டில் பிரகடனம் செய்தோம். கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

2004 ஆம் ஆண்டு, நெல்லை - பொருநை கரையில் இருந்து புறப்பட்டு, மதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், பாண்டிச்சேரி, திண்டிவனம், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை வரை மூவாயிரம் தொண்டர் படையினரோடு நான் நடத்திய மறுமலர்ச்சி நடைபயணத்தில், நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைச் சந்தித்து, மது அருந்தும் பழக்கத்தால் குடும்பங்கள் எப்படி அல்லல் படுகின்றன, இளம் தலைமுறையினரின் உள்ளமும், உடலும் எப்படிக் கெடுகிறது என்பதை விளக்கி, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில், பேரறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் அரசின் வருமானத்திற்காக, மதுக்கொடுமையை மக்களிடம் உலவவிட, அந்தத் தலைவர்கள் சம்மதிக்கவில்லை.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆன பிறகுதான் மது எனும் பெருங்கேடு சட்டபூர்வமாகவே தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டு, அண்ணா தி.மு.க. அரசும், தி.மு.க. அரசும் இந்த மதுப்பேயை வளர்த்துவிட்டுள்ளன. இன்று அது விபரீதத்தின் உச்சகட்டத்தில் தமிழகத்தை பாழ்படுத்திக்கொண்டு இருக்கிறது. மதுவிலக்கை அமல் செய்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பது ஏற்க முடியாத வாதம் ஆகும்.

தமிழகத்தில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்துக் கொடுமைகளுக்கும் மதுக்கடைகளே காரணம் ஆகும். தெருவுக்குத் தெரு ஒயின் ஷாப்புகள், ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் என இளைஞர்களையும், அனைத்துத் தரப்பினரை குடிப் பழக்கத்திற்கு ஆளாக்குகின்ற பெரும் தீங்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் தகர்ந்து வருகிறது.

எனவே தான், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தியார் பிறந்த நாளில், மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாநிலை அறப்போராட்டத்தை தமிழகமெங்கும் முதற்கட்டப் போராட்டமாக கழகம் நடத்தியது.

இரண்டாம் கட்டப் போராட்டமாக, நவம்பர் 6 ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணி அளவில், தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தக்கோரி, அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மூன்றாம் கட்டப் போராட்டமாக, டிசம்பர் 12 ஆம் தேதி அன்று நெல்லை மாவட்டம்-உவரியில் இருந்து புறப்பட்டு, 450க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, 1200 இளைஞர்களுடன் நடைப்பயணப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டு, டிசம்பர் 25 ஆம் தேதி மதுரை மாநகரில் நிறைவு செய்ய இருக்கிறேன்.

அதே காலகட்டத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நகரங்கள், பேரூர்கள், கிராமங்களில் மதுவிலக்குப் பிரச்சார நடைப்பயணத்தை கழகக் கண்மணிகள் மேற்கொள்வார்கள்.

எனவே, 6 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டப் போராட்டத்தில் அனைத்து மாவட்டட்ங்களிலும், கழக நிர்வாகிகளும், தோழர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.

தென்சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சார்பில் சென்னையில், மெமோரியல் ஹால் அருகில், எனது தலைமையில் காலை 11 மணிக்கு அறப்போர் நடைபெறும்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
04.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post