வீடுகளுக்கு வினியோகிக்கக்கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே மானியத்துடன் வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் இல்லாமல் வெளிச்சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கட்டுப்பாடு கொண்டு வந்தது.
மானியம் இல்லாத கியாஸ் விலை, மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான, வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.26.50 உயர்த்தப்படுவதாகவும், இதனால் அதன் விலை ரூ.922 ஆக உயர்வதாகவும் நேற்று பகலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று இரவு திடீரென அறிவித்தது. இதனால், முந்தைய மாத விலைக்கே இந்த சிலிண்டர் கிடைக்கும்.
இத்தகவலை பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார். ஆனால், இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடும் எதிர்ப்பு காரணமாகவே மத்திய அரசு இம்முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில், வணிகப் பயன்பாட்டுக்கான மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு (14.2 கிலோ) ரூ.33–ம், 19 கிலோ சிலிண்டருக்கு ரூ.15.50–ம் உயர்த்தப்படுவதாக நேற்று பகலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த விலை உயர்வில் மாற்றம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.