
அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உறுமயவுமே முதலில் 13வது திருத்தத்துக்கு எதிரான பரப்புரைகளைத் தொடக்கி வைத்தன.
தற்போது இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது.
“மாகாணசபைகள் பயனற்றவை. பொதுமக்களின் பணத்தை விரயம் செய்பவை. இப்போதாவது நாம் இதிலிருந்து விலக வேண்டும்.
ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை மத்திய அரசே கையாள வேண்டும்.
இந்த அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கியதால், ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம்.
இது தொடர்பாக எமது கட்சி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளது.
இதுபற்றி பலமுறை இலங்கை அரசுக்கு எழுதி விட்டோம். மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கவுள்ளோம்.
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது.
அதனை, 13வது திருத்தத்தை ஒழிப்பதற்குப் பயன்படுத்த முடியும்,
மாகாணசபைகளுக்குப் பதிலாக உள்ளூராட்சிசபைகளைப் பலப்படுத்த வேண்டும்.” என்றும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
இவரது கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணிக்கு நாடாளுன்றத்தில் 3 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.