Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மன்மோகன் இருக்கும்வரை நாடாளுமன்றம் நடக்காது ~ பாஜக

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமரே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கப் போவதாக பாரதிய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், நிலக்கரிக்காக தனியார் நிறுவனங்கள் பெற்ற உரிமங்களை ரத்து செய்துவிட்டு, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஒதுக்கியதில் அரசுக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த முறைகேடு நடந்த கால கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிலக்கரித் துறைக்கு பொறுப்பு வகித்துள்ளார் என்பதால் தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி கோரி வருகிறது.

பாரதிய ஜனதாவின் கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது பிரதமரும் அறிவித்துள்ளார். கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கை மீது விவாதம் நடத்த பாரதிய ஜனதா முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளமான டிவிட்டரில்தெரிவித்துள்ளார்.

அப்போது நிலக்கரிக்காக தனியார் நிறுவனங்கள் பெற்ற உரிமங்களை ரத்து செய்துவிட்டு, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு சோனியா என்ன பதிலளித்தார் என்பது குறித்து சுஷ்மா டிவிட்டரில் குறிப்பிடவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post