பிறந்த குழந்தையை மாற்றி வேறொரு குழந்தையை தாயிடம் வழங்கிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடந்துள்ளது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குழந்தை அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை பணியாளர் ஒருவரே இந்த மோசடிக்கு காரணமாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவமனைக்கு எதிராக குழந்தையின் உறவினர்களும், மாதர் சங்க பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், தனது மனைவி சாந்தியை கடந்த சனிக்கிழமை புதுக்கோட்டை ராணியார் அரசு தலைமை மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். அன்று மாலையே சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.
எனினும் பிறந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிப்பதற்காக குழந்தை, தாயிடம் இருந்து கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்று மாலை மீண்டும் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அது பெண் குழந்தையாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி, தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு குழந்தையை கொண்டு வந்த மருத்துவ உதவியாளரை வற்புறுத்தி உள்ளார். அதற்கு, குழந்தை மாறவில்லை என்றும் பெண் குழந்தைதான் பிறந்தது என்றும் மருத்துவ உதவியாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மருத்துவ உதவியாளர் வேண்டும் என்றே குழந்தையை மாற்றியது தெரியவந்தது.