Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை பல்கலைக்கழகங்கள் மூடல்: பல்கலைச் சமூகத்தின் பணிப்புறக்கணிப்பும் போராட்டங்களும் ஏன்?


மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித் துறைக்காக ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளிலிருந்து பல்கலைக்கழகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலண்டனில் இருந்து வெளியாகும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ள இலங்கை பற்றியதான செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொழியாக்கம் அலை செய்திகள்.


இலங்கைத் தீவில் இதுவரையிலும் அரசால் வழங்கப்பட்டு வந்த கல்வி முறைமையை சீர்குலைப்பதில் தற்போதைய இலங்கை அரசாங்கம் ஈடுபடுவருகின்றது. ஏனெனில் "எழுத்தறிவற்ற முட்டாள்கள் நாட்டில் உருவானால்தான் அவர்களை இலகுவில் கட்டுப்படுத்த முடியும்" என்னும் நோக்கத்தை அது கொண்டிருக்கின்றது. இவ்வாறு புத்த பிக்குவான மதுலவேவ சோபித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியில் மதுலவேவ சோபித மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராகக் காணப்படுகிறார். அத்துடன் தற்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்ற ஒருவராகவும் இவர் காணப்படுகிறார்.

அரசானது இலங்கையின் கல்வித் துறைக்கு மேலும் நிதியைச் செலவிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை, ஏனைய குழுக்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து புத்த பிக்குவான மதுலவேவ சோபிதவின் சமூக அநீதிக்கான தேசிய இயக்கம் ஆதரித்துள்ளது.

யூலை 04 அன்று இலங்கை பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த 5000 வரையான கல்விமான்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கை அரசாங்கமானது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதத்தை மட்டுமே செலவீடு செய்வதைக் காரணங்காட்டியே இவ்வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதற்கு விரிவுரையாளர்கள் உந்துதல் வழங்குவதாக ஆகஸ்ட் 23 அன்று, இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்து இளம் புத்த பிக்குகள் உட்பட பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு தொகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல்கலைக்கழக கல்விமான்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஆகஸ்ட் 29 அன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களை நோக்கி இலங்கை காவற்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

ராஜபக்ச அரசாங்கத்தில் முரண்பாடுகள் நிலவுவதால் பல்கலைக்கழகங்கள் அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற களங்களாக மாறிவருகின்றன. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசாங்கத்தை எதிர்க்கின்ற மார்க்சிய அமைப்புக்களின் அரசியற் செயற்படு தளங்களாக பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதனைக் கருத்திற் கொண்டே பாதுகாப்பு அமைச்சின் கீழ் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பாதுகாப்புச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கான கட்டளையை இலங்கை உயர் கல்வி அமைச்சு 2011ல் செயற்படுத்த தொடங்கியது. இலங்கை அதிபரின் சகோதரர்களில் ஒருவர் இதற்கு தலைமை தாங்கினார். பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்கள் முதலில் இலங்கை இராணுவத்தால் வழங்கப்படும் 'தலைமைத்துவப் பயிற்சிநெறியை' பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

உண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த தலைமைத்துவப் பயிற்சியானது இலங்கை அரசாங்கம் பாதுகாப்பற்ற சூழலை எதிர்நோக்குவதன் குறியீடாகவே பார்க்கப்படுவதாக முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அர்ஜுன அலுவிகார சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான சதித்திட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்கேற்பதாக இலங்கை உயர் கல்வி அமைச்சர் திரு.திஸநாயக்க வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தமது மாதாந்தக் கொடுப்பனவில் 20 சதவீத அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே முதன் முதலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அவர்களது கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித் துறைக்காக ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் கோரிக்கை முன்வைத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் தலையீடுகளிலிருந்து பல்கலைக்கழகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மற்றும் இரண்டாந்தர கல்வித் தரத்தில் ஏற்பட்டுள்ள துரித வீழ்ச்சியை எதிர்த்து பாடசாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான கல்வித் துறை முரண்பாடுகளை தீர்த்து வைப்பதற்காக திரு.ராஜபக்ச தற்போது தனது பிறிதொரு சகோதரரான பசிலை நியமித்துள்ளார். இவ்வாறான முரண்பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என இவர் தெரிவித்துள்ளார். ஆனால், மதுலவேவ சோபித தேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்நாட்டின் சிறந்த நலனுக்காக இலங்கை அதிபர் தன்னைச் சூழவுள்ள சில முட்டாள்களின் கருத்துக்களை செவிமடுக்காது பயனுள்ள தீர்வுகளை எடுக்கவேண்டும் என தேரர் வலியுறுத்துகிறார்.


[vuukle-powerbar-top]

Recent Post