மன்மோகன்சிங், பான் கீ மூன் சந்திப்புகள் கைகூடாமல் கொழும்பு திரும்பினார் மகிந்த ராஜபக்ச
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தனிப்படச் சந்தித்துப் பேச முடியாத நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்காக ஈரான் சென்றிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பினார்.
ஈரானில் தங்கியிருந்த போது, அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிவ் அலி சர்தாரி, பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநெஜாட், லெபனானிய அதிபர் ஜெனரல் மிசெல் சுலைமான், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி ஆகியோரை தனிபடச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசுவதற்கு அவர் விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும், புதுடெல்லி அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
அண்மைக்காலமாக ஐ.நா பொதுச்சபைக் கூட்டம், கொமன்வெல்த் மாநாடு, சார்க் போன்ற அனைத்துலக மாநாடுகளின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை அதிபர் சந்தித்துப் பேசிவந்தார்.
எனினும் இவர்கள் இருவரும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஒன்றாகப் பங்கேற்ற போதும், தனியாகச் சந்தித்துக் கொள்ளவில்லை.
அனைத்துலக மாநாடு ஒன்றில் இவர்கள் இருவரும் தனிப்படச் சந்தித்துக் கொள்ளாத முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.
அதேவேளை அணிசேரா மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், பான் கீ மூனையும் மகிந்த ராஜபக்ச சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்மோகன்சிங், பான் கீ மூன் சந்திப்புகள் கைகூடாமல் கொழும்பு திரும்பினார் மகிந்த ராஜபக்ச
Reviewed by கவாஸ்கர்
on
11:34:00
Rating: 5