இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் பிரதான நாடான சீனா மேலதிக இராணுவ உதவிகளை இலங்கைக்கும் வழங்குவதற்கு இணங்கியுள்ளது.
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லிக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடந்த நீண்ட பேச்சுக்களுக்களின் போதே இந்த இணக்கப்பாடு உருவானது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நடந்த சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினருடனான இந்தச் சந்திப்பில், கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு பங்கேற்றது.
இதன்போது இலங்கை இராணுவத்துக்கு முழமையான பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை வழங்க சீன பாதுகாப்பு அமைச்சர் இணங்கியுள்ளார்.
அத்துடன் இராணுவ பிரதிநிதிக் குழுக்களின் பரிமாற்றம், இராணுவ உதவித்திட்டங்களுக்கான உதவி, தனிநபர் பயிற்சிகளை விரிவாக்கல், கடல்சார் ஒத்துழைப்பை விரிவாக்கல், தீவிரவாத முறியடிப்பு, கண்ணிவெடிகளை அகற்றல், விளையாட்டு உள்ளிட்ட ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
அதேவேளை தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் அரங்கம் ஒன்றை நிறுவுவதற்கு 1564 மில்லியன் ரூபாவை இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் உடன்பாட்டிலும் சீன பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.