நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி காட்டியவர்கள் தொடர்பில் தோன்றிய உந்துருளியில் இலக்கம் உள்ளிட்ட ஆவணங்கள் பருத்தித்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட போதிலும், இதுவரை எவரும் அடையாளம் காணப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை.
அது தொடர்பில் புலன்விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடந்த ஜூலை மாதம் நெல்லியடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உந்துருளியில் தோன்றியவர்கள் புலிக்கொடியைக் காட்டியவாறு சென்று வயோதிபர் ஒருவரையும் மோதிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர். காவல்துறை இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
வந்தவர்கள் உந்துருளி இலக்கத்தை மறைக்கவில்லை. அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் தம்மிடம் போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துவந்த நிலையில் சம்பவ இடத்தில் தோன்றிய உந்துருளியில் இலக்கம் உள்ளிட்ட ஆவணங்கள் பருத்தித்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவை நீதிமன்றினூடாக நெல்லியடிப் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணை நடைபெற்றுவருகின்றது என்று எரிக்பெரேரா தெரிவித்தார்.