Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் இலங்கை கால்பந்து அணி திருப்பி அனுப்பப்பட்டது - முதல்வர் அதிரடி!



இன்று முதல்வர் ஜெயலலிதா இலங்கை கால்பந்து அணியை திருப்பி அனுப்பி அதிரடியான துணிச்சலான செயலை செய்துள்ளார் . அதன் விவரம் வருமாறு 

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான  உரிமைகளை பெறும் வரை பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்று
,
தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி தொழில்நுட்பப் பயிற்சியை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.
அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன்,  அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது.
ஆனால், மத்திய அரசு அதற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சியை பெறும் வண்ணம், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை ராயல் காலேஜ் ஆப் கொலம்போ நிர்வாகம் தொடர்பு கொண்டு,

இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், இதன்பேரில், பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலர் அதற்கான ஏற்பாட்டினை செய்ததாகவும், 30.8.2012 அன்று தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் 31.8.2012 அன்று சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் எனக்கு தகவல் வரப்பெற்றது. 

இதனை அறிந்த நான் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். அந்த விசாரணையில்,

பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியினை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அதன் பேரில், நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது. 

நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குதான் இந்த அதிகாரம் உள்ளது.  

தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளார். 

எனவே, இந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று நான் உத்தரவிட்டுள்ளேன். 

இலங்கை கால்பந்து வீரர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதேபோன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரையும் திருப்பி அனுப்பிட நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் அவர்களுக்கு அலை செய்திகள் குழுமத்தின் சார்பாக நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post