பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 3 இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்திருந்தன.
இதில், காவிரி நிதிநீர் ஆணையத்தை கூட்டத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனினும், டிசம்பர் மாதம் வரை தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக அரசும் பதில் அளித்திருந்தன. இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் தனியாக ஓர் இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு தேதியை குறிக்காவிட்டால் நாங்களே தேதியை தீர்மானிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர். நதிநீர் ஆணையத்தைக் கூட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் தேவையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவிரி ஆணையத்தை கர்நாடகம் பல் இல்லாத ஆணையம் என்று கூறியதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.