Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய அரசியலில் குழப்பத்தை உருவாக்கி வருகிறது இலங்கை - முன்னாள் வெளிவிவகாரச் செயலர்


சுற்றியுள்ள எல்லா அயல் நாடுகளாலும் இந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் முஜ்குந்த் டுபே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இனமோதல்கள், பெருமளவிலான சட்டவிரோத குடியேற்றங்கள் அல்லது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு தளம் அமைக்க இடம்கொடுப்பது ஆகியவற்றின் மூலம் அயல்நாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து, 1991ல் ஓய்வு பெற்ற முஜ்குந்த் டுபே, ‘இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை: மாறி வரும் உலக சூழ்நிலையை சமாளித்தல்' (India's Foreign Policy: Coping with the Changing World) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

விரைவில் வெளியிடப்படவுள்ள இந்த நூலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு, அந்தநாட்டு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

அவர்கள், ஜம்மு கஸ்மீரில் உள்ள, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி, இந்தியாவுக்குள் ஊடுருவ, பாகிஸ்தான் அரசு ஊக்கமளித்து வருவது நிரூபணமாகி இருக்கிறது.

பாகிஸ்தானில், தீவிரவாதிகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்தியாவின் உறுதித்தன்மையை சீர்குலைப்பதும், தீவிரவாதத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் தான் பாகிஸ்தானின் திட்டம்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு, நேரடி அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன.

இந்த நாடுகள், அணு ஆயுதங்களை பெருமளவில் குவித்து வருகின்றன.

இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய ஒரு நாடாக சீனா உள்ளது. அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை சீனா மிரட்டுகிறது.

உல்பா தீவிரவாதிகளையும் ஏனைய தீவிரவாத குழுக்களையும், தமது எல்லைப் பகுதியில், சுதந்திரமாக செயற்படுவதற்க, பங்களாதேஸ் அனுமதிக்கிறது.

வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்களுக்கு முகாம் அமைக்க இடம் கொடுத்து அங்கிருந்து தீவிரவாதிகளை எல்லை கடக்க வைக்கிறது.

இதுமட்டுமின்றி பங்காளதேஸ் நாட்டவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து ஆயுதவழியற்ற இன மோதலையும் அந்த நாடு ஊக்குவித்து வருகிறது. அசாமில் இப்போது வன்முறைகள் ஏற்பட இதுவே காரணம்.

இதேபோல,இலங்கைக்கும் தமிழர்களை அகதிகளாக்கி, இந்திய அரசியலில் தொடர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறது.

பங்களாதேஸ் சக்மா அகதிகளை அனுப்பியது போல, இலங்கை தமிழர்களை அகதிகளாக அனுப்பி வருகிறது.

அமெரிக்கா, தன்னிச்சையாக எடுத்து வரும் நடவடிக்கைகளால், அனைத்துலக அளவில், பெரும்பாலான நாடுகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்டது.

இதனால், அயல்நாடுகளின் போட்டியை சமாளிக்கும் வகையில், இந்தியாவும் தயாராக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post