இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி உலகம் தடை செய்த குண்டுகளையும், நாசக்காரக் குண்டுகளையும் வீசி குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர்கள் உட்பட எங்கள் தமிழக்குல இரத்த உறவுகளை கோரமாக கொன்று அழித்த கொடியவன் ராஜபக்சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளதாகவும், ராஜபக்சே அதில் பங்கேற்கப் போவதாகவும், பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
கவுதம புத்தர் தன் அரண்மனை சுகபோகத்தை உதறிவிட்டு, காடுகளில் சஞ்சரித்து மனிதகுலத்துக்கு கருணை, அன்பை, அறவழியை, சகிப்புத்தன்மையை போதித்ததோடு அதன்படி வாழ்ந்து காட்டிய ஒரு மறுமலர்ச்சியாளர் ஆவார். அந்த புனித பெருமகனார் பெயரை உச்சரிப்பதற்கு கூட அணுவளவும் தகுதி இல்லாத கொடிய கொலைகாரன்தான் ராஜபக்சே. புத்தரின் பெருமை பேசும் விழாவில் ராஜபக்சே கலந்துகொண்டால் புத்தரின் எலும்புகள் கூட அதை மன்னிக்காது.
மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்கும், சோனியா காந்தி இயக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடிகளும் கொடுத்து, தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டு இன்றுவரை மன்னிக்க முடியாத பல துரோகங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி அன்று உலகெங்கும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த அந்நாளில் இந்திய அரசு இலங்கை அரசோடு கொழும்பு நகரில் ஒரு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி புத்தர் பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப்பொருள்களை இலங்கைக்கு அனிப்பி வைத்து, ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5 வரை இலங்கையில் காட்சிப் பொருளாக கொண்டு செல்வது என்று ஒப்பந்தத்தில் செய்த முடிவைக் கண்டித்து மறுநாள் மே 19 ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு விளக்கமான ஒரு கடிதம் அனுப்பினேன்.
புத்தரின் பெயரைச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாது தமிழர்களை படுகொலை செய்த சிங்கள இனவாத ராஜபக்சே அரசுக்கு, புத்தரின் புனிதப்பொருள்களை அனுப்பக்கூடாது என்று வற்புறுத்தியிருந்தேன்.
ஆனால், தமிழர்களின் மன வேதனைகளை உதாசினப்படுத்திவிட்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று புத்தர் பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப்பொருள்களை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா அவர்களும் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் நாயகம் பிரவீண் ஸ்ரீவத்சவா அவர்களும் கொழும்புக்கு கொண்டுபோய் தமிழர்களின் ரத்தம் தோய்ந்த ராஜபக்சே கரங்களில் ஒப்படைத்தனர். இதற்கு என்றைக்கும் மன்னிப்பே கிடையாது.
தற்போது ஈழத்தமிழர் கொலையால் காயப்பட்டு ரணவேதனையில் துடித்துக் கொண்டு இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் மத்தியப் பிரதேசத்தின் பாரதீய ஜனதா கட்சி அரசு சூட்டுக்கோலை திணிப்பது போல் சுஷ்மா சுவராஜ் என்ற பெண்மணி அறிவித்துள்ளார்.
அதே மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நான் மனதால் போற்றுகின்றவருமான மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கள அரசு பணம் கொடுத்தாலும் இந்திய அரசு ஆயுதங்களை விற்காது என்று துணிச்சலாக முடிவெடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அறிவித்தார். அதனையே செயல்படுத்தினார்.
விடுதலைபுலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் 2002 கிளிநொச்சி வந்து திரும்பும் போது சிறுநீரக ஆய்வு சிகிச்சைக்கு இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று அன்றைய இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை அழைத்துக்கொண்டு போய் நான் பிரதமர் வாஜ்பாய் அவர்களை வேண்டிகொண்ட போது, அவர் அதனை ஏற்றுக்கொண்டு அன்றைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜஷ்வந்த்சிங் அவர்களை அந்த நேரத்திலேயே தொலைபேசியில் தொடர்புகொண்டு பாலசிங்கம் இந்தியாவுக்கு வர ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.
இந்தத் தகவலை 3 நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஆன்டன் பாலசிங்கம் ஆய்வு சிகிச்சைக்கு அவசரம் ஏற்பட்டதால் நான் தகவல் சொல்லுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் இன்றோ உடல் நலம் மிக நலிந்து பேசவும் முடியாமல் அந்த மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாஜ் அவர்கள் படுத்த படுக்கையாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத துரோகம் தமிழருக்கு செய்யும் கேடுகெட்ட செயலை சுஷ்மா சுவராஜூம், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசும் அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி அவர்களும் ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான அக்கரை கொண்டுள்ள எனது நண்பர் யஷ்வந்த்சின்கா போன்ற பாரதீய ஜனதா கட்சி தலைவர்களும் மகிந்த ராஜபக்சேவை புத்தர் விழாவுக்கு அழைக்கும் முடிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
எனது நியாயமான இந்த வேண்டுகோளை உதாசீனம் செய்து மாபாவி ராஜபக்வேவை மத்திய பிரதேச சாஞ்சியின் விழாவுக்கு அழைத்து வந்தால், அதனை எதிர்த்து சாஞ்சியில் செப்டம்பர் 21 இல் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
03.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க