Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெயருக்கு பின் சாதியை சேர்க்கும் நடிகைகள் - தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்



இப்போது சமீப காலமாக பெயருக்கு பின் சாதி சேர்க்கும் பழக்கம் தமிழ் நடிகைகள் நடிகைகர்களுக்கு வந்துள்ளது.

இப்போது  நடைபெற்ற பாகன் திரைப்படப்பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் இயக்குனர் கரு. பழனியப்பன். கதாநாயகி, ஜனனி அய்யர் பற்றிப் பேசும் போது,

"இவர் அய்யர் என்று பெயரை வைத்துக்கொண்டிருப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. அது பற்றி அவரிடம் தனியே பேசுவதாயிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். 

பெயருக்குப் பின் தான் இன்ன சாதியினர் என்று குறிப்பிடும் வழக்கம் ஆதிக்க சாதியினரிடம் மட்டுமே காணப்படும் கொடிய பழக்கமாகும். ஜனனி ஐயர் போல மாரிப்பள்ளச்சி, கருப்பாயிப்பறைச்சி, ராக்குக்குறத்தி,குருவு சக்கிலியச்சி என்று ஒடுக்கப்பட்ட இனப்பெண்கள் தன் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை.அனுஜா ஐயர், பிரியா ஐயர் , கீர்த்தி ரெட்டி,   மீரா ஐயர், ஷாலினி ஐயங்கார் என்று ஆதிக்க சாதிப் பெண்கள் மட்டும் இன்னும் வேற்றுமையையும், ஜாதி துவேசத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம் இந்தத் தீண்டாமை வடிவங்களைத்தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள். 

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்ற வேறுபாடு இல்லாமல் "தான், இழிந்த ஜாதியல்ல" என்பதை காட்டும் அடையாளமாய் கருதிக் கொண்டு இப்படி ஆதிக்க சாதியினர் யாவரும் தம் சாதியைப் பெயருக்குப் பின்னால் போடும் வழக்கத்தைத் தொடர்ந்து வருகின்றனர். என்றாலும் பெண்களும் இப்படி ஆதிக்கவெறியுடன் திரிவதை தான் காணமுடிகிறது. பார்பனர் அல்லாத மலையாளிகள்  மத்தியிலும் இப்படி சாதியை சேர்க்கும் பழக்கத்தை காண முடிகிறது. ராஜீவ் மேனன் போன்ற திரைப்பட பிரபலங்களும் இதில் அடக்கம்.  

 பகுத்தறிவு இயக்கங்களின் பங்களிப்பு காரணமாய் கடந்த சுமார் நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் பெயருக்குப் பின்னால் ஜாதி போடும் ஆதிக்க வெறி பெரிய அளவில் குறைந்து விட்டது. இருந்த போதும், சமூக நீதி பற்றிய சரியான புரிதலை இளைய தலையமுறையினரிடம் ஏற்படுத்தத் தவறியதால் இந்தக்கொடிய கேவலமான வழக்கம் ஆங்காங்கே மீண்டும் தலையெடுக்கத்தொடங்கியுள்ளது. "இதைப் பேசினால் விழாவின் சுமுக நிலை பாதிக்குமே, மற்றவர்களிடம் தனக்குள்ள உறவு பாதிக்குமே" என்ற சுய நலக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்காமல், மனதுக்கு சரியெனப்பட்டதை துணிச்சலாய் வெளிப்படுத்திய கரு பழனியப்பன் போன்றவர்களின் குரல்கள், மனித நேயத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துகின்றன.

இப்படி பெயருக்கு பின்னால் ஜாதியை சேர்ப்பது இன்னும் வடநாட்டில் வழக்கத்தில் உள்ளது . ஒருவர் பெயரை வைத்து சாதியை கண்டுபிடித்து  விடலாம் . இதனால் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் படும் துன்பங்கள் ஏராளம் . ஆதிக்க சாதியனர் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடிகிறது , அதனால் வேலைவாய்ப்பு , வியாபாரம் , சலுகைகள் என அனைத்தும் சாதியை வைத்தே பரிமாற்றம்  செய்யப் படுகிறது. 

எல்லோரும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டு மெனில் கண்டிப்பாக ஜாதியை பெயருக்கு பின் போட்டுக் கொள்ளக் கூடாது. இப்படி ஜாதியை சேர்ப்பதால் , இந்த கொடிய சாதி நோய் அடுத்தவர்களையும் பெயர்களுக்கு  பின் சாதியை போட வைக்க தூண்டும் என்பதே உண்மை. அதற்காகவே பெரியார் சாதி மறுப்பை மக்களிடையே கொண்டு சென்றார் . இன்று மீண்டும் சாதிப் பெயர்கள் தமிழ் நாட்டில் தலை தூக்குவதை சமுதாய  அக்கறை கொண்ட யாரும் ஊக்குவிக்கக் கூடாது. அவ்வாறு ஜாதியை பெயருக்கு பின் போடும் நபர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் , அவர்களுக்கு எந்த வாய்ப்பும்,  வியாபாரமும் கொடுக்கக் கூடாது .  

[vuukle-powerbar-top]

Recent Post