உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் சோழர் கால கல்வெட்டு |
செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும், மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின் அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக் காட்டியிருப்பது காண்க:
வின்ஸ்லோ என்ற அறிஞர், "செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியினையும் வெல்ல வல்லது தமிழ்மொழி" என்றார். மேலும் அவரே, "அதன் (தமிழ்) பெயரே இனிமை என்று பொருள்படுவதற்கு ஏற்ப, அதனிடத்தில் கேட்டாரைத் தம் வசமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.
டெய்லர் என்பார், "அது (தமிழ்) நிறைந்து தெளிந்து ஒழுங்காயுள்ள மொழிகளுள் மிகவும் சிறந்ததொன்றாகும்" என்று மொழிந்துள்ளார்.
மொழிக்குடும்பங்களின் தாய்: தமிழ் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு பாடல்கள் |
டாக்டர் G.U. போப் பாதிரியார், "தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழி அன்று" என்று கூறியதோடு நில்லாமல், தமிழ்மொழி மேல் அளவற்ற அன்பு பூண்டு தம் கல்லறையின மேல் "இங்கே தமிழ் மாணவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்பு முறி (will) எழுதி வைத்தார். இவருக்கிருந்த தமிழ்ப்பற்றை என்னென்று பாராட்டுவது! இந்த அளவு செந்தமிழ் மொழி, அந்தப் போப் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல் துரைமகனார், "தமிழ் பண்டையது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது; விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது" என்றார்.
கிரியர்சன் என்ற மற்றொரு ஐரோப்பிய அறிஞர், "திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகத்தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதுமாகும். மிகவும் சீர்திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழியுமாகும்; சொல்வளமும் மிகுந்தது, அளவிட வொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்றும் வருவது" என்றார்.
சிலேட்டர் என்பார், "திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மக்கள் பேச்சு மொழிக்குரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ்மொழி; தர்க்க அமைப்புடையதும் தமிழ் மொழியே" என்றார்.
விட்னி என்ற ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம், தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப் போலவே எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர் ஒருவர் தமிழ்மொழி எண்ணுவதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும் விடச் சிறந்தது என்று கூறியதாய் எழுதியிருக்கிறார்.
ஜான் மர்டாக் என்ற ஐரோப்பிய அறிஞர், "சீரிய மொழியாயும் அழகிய இலக்கியங்கள் உடையதாயும் விளங்குவது தமிழ் மொழியே" என்றார்.
F.W.கெல்லட் என்பார், "எந்த நாட்டினரும் பெருமை கொள்ளக்கூடிய இலக்கியம் தமிழ் இலக்கியம்" என்று தமிழைப் பாராட்டியுள்ளார்.
சார்லஸ் கவர் என்பவர், "தமிழ் மொழியின் மெருகு நிலையும் அருந்தமிழ்ப்பா நலமும் ஐரோப்பாவில் மிகுதியாகத் தெரியப்படுத்துதல் வேண்டும்" என்றார்.
ஜெர்மனி நாட்டவரும் ஆங்கில நாட்டின் குடிமகனானவரும் அக்காலத்துத் தலை சிறந்த மொழி நூல் வல்லுநராய் விளங்கியவரும், இருக்கு வேதத்தைச் சாயனருடைய உரையுடன் பதிப்பித்தவருமாகிய மாக்ஸ் முல்லர் (Max Mueller), "தமிழ் மிகப் பண்பட்ட மொழி, தனக்கே உரியதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.
இன்றைய மொழி நூலறிஞரான திரு. கமில் சுவலபில் (Kamil Zovelebil)*, "தமிழ், உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பண்பட்ட மொழிகளும் ஒன்று. இஃது உண்மையிலேயே அச்சொற்றொடருக்கு ஏற்றவாறு உயர் தனிச் செம்மொழியாக இருப்பதோடு கூட இன்றும் பேச்சு மொழியாகவும் இருக்கிறது" என்று தமது ‘தமிழ் இலக்கண நெறி வரலாறு’ (Historical Grammar of Tamil) என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இனிப் பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் இருவர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளதைக் காண்போம்.
பேராசிரியர் மேய்ல் (Meil) என்பார் கூறியதாவது: "தமிழர்கள் நல்ல பண்புடையவர்கள். இயற்கையாகவே இந்த நற்பண்பு அவர்களிடத்தில் அமைந்திருக்கிறது. இதற்காகவேனும் நாம் அவர்கள் மொழியாகிய தமிழைக் கற்பது நன்று... அவர்களுடைய மொழியாகிய தமிழ் இலக்கியம் விந்தையும் வியப்பும் தரத்தக்கதாய் வற்றாத உயர் எண்ணங்களின் ஊற்றாய் இருக்கிறது. தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகப் பழமையானது. அதுவே முதல் மொழியாயும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரெஞ்சுக்காரர்கள் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது போனது பெருங்குறையே ஆகும்."
மேய்ல் கூற்றிற்கு இணங்க அவருக்குச் சிறிது காலத்திற்கு முன்னரே இருந்த பியேர் லொத்தி (Pierre Loti)என்ற மற்றொரு பிரெஞ்சு அறிஞர் குறிப்பிட்டிருப்பதையும் பார்ப்போம். அது வருமாறு: "இந்தியாவிற்குப் பிரெஞ்சுக்காரர்கள் வந்ததன் பின் அந்நாட்டின் மொழிகளுள் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொண்டது தமிழ் மொழியே. அந்த மொழி வாயிலாகவே தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சமூக அமைப்புகள், சமயக் கோட்பாடுகள் முதலியவற்றின் உண்மையான தத்துவங்களை அறிந்த கொள்ள வழி ஏற்பட்டது."தமிழிலக்கியம் மிகவும் பரந்துபட்டது; மிக்க தொன்மை வாய்ந்தது. மற்ற எந்த மொழியும் வரிவடிவம் அடைவதற்கு முன்னமே தமிழ் எழுதப்பட்டு வந்தது. தமிழின் நெடுங்கணக்கு (Tamil Alphabet)முழுத்தன்மையுடையது; முதல் தன்மையும் உடையது. இந்த நெடுங்கணக்கை அமைத்த முறை மிக்க அறிவு சான்ற தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நெடுங்கணக்கில் மிக நுண்ணியதும், மிக நியதியுள்ளதுமான கண்ணோட்டத்தினை நாம் காண்கிறோம். இந்த நெடுங் கணக்குத் திடீரென்று ஏற்பட்டதன்று. இலக்கணப் புலவர் ஒருவரின் அல்லது புலவர் கூட்டம் ஒன்றின் நுண்ணறிவுள்ளநெடுங்காலப் பணியின் பயனாய் அமைந்ததாகும்."
இப்பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் தமிழைப் பற்றிப் பாராட்டியுள்ள செய்தியானது, புகழ்பெற்ற பிரெஞ்சு மொழி அறிஞரும் பல தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவருமான ரா.தேசிகப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழகமும் பிரெஞ்சுக்காரரும்’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இத்துணைத் தமிழ்க் கவிஞர்களும் மொழியறிஞர்களும் தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழியின் இனிமையையும் தனித்தன்மையையும், அதன் இலக்கியச் சிறப்பினையும் நலம் மிக்க சொல் வளத்தினையும் அரிய வன்மையையும் மிகுந்த தொன்மையையும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணும்போது, தண்டமிழ் மொழியின் உண்மைத் தன்மையை நன்கு உணரலாம். கூறியவையனைத்தும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
நாம் அறியாத நமது மொழியின் புகழை மற்றவர்கள் சொல்லிக் கேட்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
நன்றி: தமிழ் இணைய பல்கலைக் கழகம்