அக்டோபர் 12-ம் தேதி மாற்றான் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தேதியில்தான் கமல் தனது விஸ்வரூபத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இது கமல், சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரண்டுமே பெரிய படங்கள். சர்வதேச அளவில் அதிக அரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டவை. இந்த இரு படங்களும் மோதினால், நிச்சயம் தியேட்டர் பிரச்சினை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த 'மோதலை' விரும்பவில்லை. இதுகுறித்து விநியோகஸ்தர் ஒருவர் கூறுகையில், "மாற்றான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. விஸ்வரூபம் இன்னும் இசை வெளியீடு நடத்தப்படவில்லை. கமல் சார் சினிமா வர்த்தகம் தெரிந்தவர். எனவே இந்தப் போட்டியை அவர் தவிர்த்துவிடுவார்," என்றார்.
விஸ்வரூபம் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உலகெங்கும் 2000 அரங்குகளுக்கு மேல் வெளியிட வேண்டும் என கமல் திட்டமிட்டுள்ளாராம்.
சூர்யாவின் மாற்றான் படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை 1500 திரையரங்குகளில் வெளியிடப் போகிறார்களாம்.