Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்: பத்தாவது படிக்கும் மாணவியை ஏமாற்றி கற்பழித்த காவலர்!

பத்தாவது படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி கற்பழித்து விட்டு தலைமறைவாகியிருக்கிறார் காவலர் ஒருவர். இந்த சம்பவம் குடியாத்தத்தில் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:

''பக்கத்தில் இருக்கிற ஸ்கூல்ல நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு 15 வயசு. ஒரு அண்ணா வும் ஒரு அக்காவும் இருக்காங்க. அவங்களும் நான் படிக்கிற ஸ்கூல்லதான் படிக்காங்க. எங்க அப்பா டீக்கடை வச்சிருக்கார். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு டீக்கடையைப் பார்த்துப்பேன். போனமாசம் 4-ம் தேதி, எங்க ஊர்ல தேர்த் திருவிழா நடந்திச்சு. அதுக்காக ஸ்கூல்ல லீவு விட்டு இருந்தாங்க. அப்போ வேலூர்ல இருந்து பாதுகாப்புக்கு போலீஸ் வந்து இருந்தாங்க. நான் டீக்கடையைப் பார்த்துக்கிட்டு இருந்தப்பத்தான் 'அவர்’ பழக்கமானார். என்கிட்ட சகஜமாப் பேசினார். 'நான் ஆயுதப் படைப் பிரிவில் வேலூரில் இருக்கேன்’னு சொன்னார். நானும் படிக்கிற விஷயத்தைச் சொன்னேன். தினமும் என்னைப் பார்த்து சிரிப்பார். 6-ம் தேதி என்கிட்ட வந்து, 'உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். எங்க வீட்டுல சொன்னா சம்மதிக்க மாட்டாங்க. அதனால் நாம ரெண்டு பேரும் வீட்டைவிட்டு ஓடிப்போயிடுவோம்’னு சொன்னார். 

எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா அவரு தலையில அடிச்சு சத்தியம் செஞ்சார். அதனால் வீட்டுல யார்கிட்டேயும் சொல்லாம அவர்கூட ஆம்பூர் வந்துட்டேன். அங்க இருந்து மெட்ராஸுக்குக் கூட்டிட்டுப் போயிட்டார். தாம்பரத்தில் அவரோட ஃப்ரெண்ட் வீட்டில் தங்கினோம். அந்த வீட்டில் ஃப்ரெண்டோட அம்மா, அப்பா எல்லோரும் இருந்தாங்க. அதனால நாங்க மட்டும் அன்னிக்கு நைட்டு தனியா ரூம் எடுத்துத் தங்கினோம். அப்ப, 'நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்’னு சொல்லி, ஆசைக்கு இணங்கவெச்சுட்டார். அடுத்த நாளே, 'நான் வேலைக்குப் போகணும். இல்லைன்னா சந்தேகப்படுவாங்க’னு சொல்லி என்னை அவங்க வீட்டில் விட்டுட்டுப் போயிட்டார். எனக்கு அப்ப பயமாயிருந்தது.

ஆனாலும் தினமும் ரெண்டு தடவை போன் பண்ணினார். 'எங்க வீட்டில் சொல்லி இருக்கேன். அம்மாவும் அப்பாவும் சம்மதம் சொன்னதும் வந்து உன்னை கூட்டிட்டுப் போறேன்’னார். அதுதான் கடைசி. அதுக்குப் பிறகு எனக்கு போன் பண்ணவே இல்லை. அவருடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு. எனக்கு அப்பத்தான் சந்தேகம் வந்துச்சு. ஆனா, அதுக்குள்ள நான் இங்கே இருக்கிற விஷயம் எப்படியோ தெரிஞ்சு என் வீட்ல இருந்து வந்து என்னைக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. என் வாழ்க்கையே நாசமாப்போச்சு. இனிமே என்ன பண்றதுன்னே தெரியல. போலீஸில் புகார் கொடுத்து இருக்கோம். எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிவெச்சாலே போதும்ணா'' என்று அழத் தொடங்கினார்.

அவரது தந்தையிடம் பேசினோம். ''எல்லாம் என் தப்புங்க. பொண்ணு, கடையில் இருக்கும்போது நான் கவனிப்போட இருந்திருக்கணும். அதனாலதான் ஒரு போலீஸ்காரன், அவ வாழ்க்கையை நாசமாக்கிட்டான். இப்பவும் அந்தப் பையன் எப்படி இருப்பான்னு எனக்குத் தெரியாது. நான் இல்லாத சமயம் வந்து பொண்ணுகிட்ட அன்பாப் பேசி நடிச்சு, ஏமாத்திட்டான். போன 21-ம் தேதி என் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது. நான் திரும்ப அந்த நம்பருக்குக் கால் பண்ணும்போது, 'உங்க பொண்ணு இந்த அட்ரஸ்ல இருக்கா. கூட்டிட்டுப் போயிடுங்க’ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க. அதுக்குப் பிறகு அந்த நம்பரை யாரும் எடுக்கவே இல்லை. உடனே நான் கடவுளை வேண்டிக்கிட்டு மெட்ராஸுக்குப் போய், என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்தேன். போலீஸில் புகார் கொடுத்து இருக்கோம். அவங்களாவது என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தருவாங்கன்னு நினைக்கிறோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் பேசினோம். ''அவங்க கொடுத்த புகாரின்படி அந்தப் பையனைப் பிடிச்சு விசாரிச்சோம். அவனுக்கும் இந்தப் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று ஒரே போடாகப் போட்டார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவி நம்மை தொடர்புகொண்டு ''என்னை அழைத்துச் சென்றது போலீஸ்காரர் இல்லை'' என்று நடுக்கத்துடன் தெரிவித்தார்.

காவல்துறையினரின் மிரட்டல்தான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணமா என்பது தெரியவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post