Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கசாபின் தூக்கு உறுதியானாலும், அதை நிறைவேற்ற ஆள் இல்லை!

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பின் தூக்கை நிறைவேற்ற அதற்குரிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2004ம் ஆண்டில்தான் கடைசியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தில், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்செய் சாட்டர்ஜிக்கு நாடா மாலிக் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றினார்.

அந்த தண்டனையை நிறைவேற்றிய சில காலத்துக்குப் பிறகு அவரும் காலமாகிவிட்டார்.

அதன்பிறகு, பஞ்சாபில் ஒரு தூக்கு தண்டனையை நிறைவேற்ற யாரும் இல்லை.

தண்டனை பெற்ற பல்வந்த் சிங் ரஜோவனா விவகாரம் அதன் பிறகு அரசியல் பிரச்சினையாக மாறியதால் தண்டனை தள்ளிப்போனது.

தற்போது இந்தியாவில் தூக்கிலிடுவதற்கு உரிய பயிற்சி பெற்ற நபர்கள் இல்லாத காரணத்தினால் கசாப்பின் தண்டனை கேள்விக்குறியாகியுள்ளது.

இது தொடர்பாக, மகாராஷ்டிர மாநில சிறைத்துறைத் தலைவர், மூத்த சிறை அதிகாரிகளில் ஒருவர் பயிற்சி பெற்று, அந்தப் பணியை நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2004ம் ஆண்டில் கடைசியாக தூக்கிலிடும் பணியில் இருந்த நாடா மாலிக்கின் மகன், மகாதேவ் மாலிக் தற்போது மேற்கு வங்க சிறையில் வேறு பணியில் இருக்கிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு அஜ்மல் கசாப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த போதே, அந்தத் தண்டனையை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாக மகாதேவ் மாலிக் தெரிவித்தார்.

தனது தந்தை நாடா மாலிக், 25 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் என்றும், தனது தாத்தா 600 தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியவர் எனவும் அதனால் தூக்கிலிடும் அனுபவம் வாய்ந்த பரம்பரை தங்கள் பரம்பரை என்றும் மகாதேவ் மாலிக் கூறுகிறார்.

ஆனால், அவர் அதற்கான பயிற்சியை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post