யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர் ஊர்வலத்தில், மாட்டு வண்டி ஒன்றில் ஈழ கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வண்டியில் இருந்து கொடியை பாதுகாப்பு தரப்பினர் அப்புறப்படுத்தியிருந்தனர். வடக்கில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த புலிகளின் ஆதரவாளர்கள் செய்த வேலையாக இது இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
புலிக்கொடியும் பரபரப்பும்
வரலாற்றுப்புகழ் மிக்க சந்நிதி முருகன் கோவிலில் நேற்று காலை பறந்த புலிக்கொடி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலை வேளை தேர்முட்டிப்பகுதியில் இந்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. பூங்காவன திருவிழா தினமான நேற்றுக் காலை வேளை இப்புலிக்கொடி தொங்க விடப்பட்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இரவு வேளைகளில் பெரும்பாலும் புலனாய்வு பிரிவு படை அதிகாரிகளும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருப்பது இங்கு சாதாரணமானது. குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும் தொண்டமனாறு துருசு மற்றும் புதியதாக நிர்மாணிக்கப்படும் பாலமென பாதுகாப்பிற்கு பெருமளவு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டேயுள்ளனர்.
இத்தகைய சூழலில் நேற்று புலிக்கொடி விவகாரம் சூடுபிடித்துள்ளது. திட்டமிட்டபடியே இக்கொடியை தொங்கவிட்ட நபர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் படையினர் சகிதம் புலிக்கொடியை மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளனர். எதிர் வரும் வியாழக்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளது.குறித்த தேர் ஏற்கனவே படையினரால் தீக்கிரையாக்கப்பட்டு மீளக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனது வழிபாட்டிற்குரிய ஆலயங்களினில் சந்நிதி முதன்மையானது குறிப்பிடத்தக்கதாகும்.