மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட முகமது அஜ்மல் அமிர் கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை எதிர்த்து தொடரப்பட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம், கடந்த 2010ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி கசாபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கசாப் மேல்முறையீடு செய்தார். 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கசாபின்மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் கசாப். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கசாபின் மரண தண்டனைக்கு 2011ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் கசாப் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், மும்பை தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட, பாஹீம் அன்சாரி மற்றும்சபாவுதீன் அஹமது ஆகியோர் விடுவித்ததை எதிர்த்து, மகாராஷ்டிர மாநிலஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கின் மீதானதீர்ப்பும் இன்று உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது.