விடுதலைப்புலிகள் என்ற அமைப்பிற்கு விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். இதற்குக் காரணம் அவர்கள் விடுதலைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக மட்டுமல்ல...
மாறாக அவர்களின் நிர்வாகத்தில் அச்சமற்ற உறக்கம், எந்த நேரமும் வீதியில் பெண்கள் பாதுகாப்புடன் நடமாடக் கூடிய சுதந்திரம், களவு, கொள்ளையயன்ற பேச்சுக்கே இடம் இல்லாத நிலைமை, இவை காரணமாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தனர் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.
விடுதலைப் புலிகள் மீண்டும் தோற்றம் பெற்று விடுவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசிடமும், இந்திய மத்திய அரசிடமும் இருக்கவே செய்கிறது.
விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவார்கள் என்ற நினைப்பை இல்லாமல் செய்ய வேண்டுமாயின், மீண்டும் புலிகள் தோன்றினால் அதற்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பதை முற்றாக தடுக்க வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி தமிழ் மக்களுக்கான உரிமையை இலங்கை அரசு வழங்குவது மற்றும் அச்சமற்ற பாதுகாப்பான சூழமைவை தமிழ் பிரதேசங்களில் ஏற்படுத்துவது என்பன முக்கியமானவையாகும்.
இவற்றை செய்யாது விடுத்து புலனாய்வுத் துறையின் தகவல்களைப் பெற்று தமிழ்ப் பிரதேசங்களில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்வதானது, புலிகளின் தேவையை மேன்மேலும் அதிகரிக்கச் செய்யுமே தவிர அரசு நினைப்பது போல, தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய விடுதலைப்புலிகள் பற்றிய நினைப்பை இல்லாது செய்ய முடியாது.
இப்போதெல்லாம் வீதிகளில் பெண்பிள்ளைகள், மாணவிகள் மீதான சேட்டைகள் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் தங்களுக்குள் மிகுந்த வேதனை கொள்கின்றனர்.
உதாரணமாக யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான தனியார் கல்வி நிறுவனத்திற்குச் செல்கின்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்கிள்களில் திரிகின்ற, நடுத்தர வயதுடைய ஒருவரின் சேட்டை அதிகரித்துள்ளதாக பலரும் கவலை கொள்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து மாணவிகளின் முதுகில் ஓங்கி அறைந்துவிட்டு அந்த மர்ம நபர் ஓடித் தப்பி விடுகின்றார்.
இந்தக் கொடூரத்தால் மாணவிகள் தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
இத்தகைய செயல்கள் எங்கள் பிள்ளைகளின் கல்வியை பெரிதும் பாதிக்கின்றதென்னும் உண்மையை பொலிஸ் தரப்பு உணர்ந்த கொள்ள வேண்டும்.
சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யாத வரை பொலிஸார் இருந்தும் என்ன பிரயோசனம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும்.
இதுபோல சில இளைஞர்களின் தொந்தரவும் தாங்க முடியவில்லை என்ற வேதனையான சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பது அவசியம்.