Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புத்தர் சிலையை முத்தமிட்ட இரு பிரிட்டிஷ் பெண்கள் இலங்கை சிறையில் அடைப்பு


தனது அரசியல் சாசனத்தின் வாயிலாக இலங்கை புத்த மதத்திற்கு மேலிடம் (Primacy) வழங்குகிறது. புத்த மதத்தைப் பாதுகாப்பதும்

அதற்கு இழுக்கு வராமல் தடுப்பதும் நீதி மன்றங்களின் தலையாய பொறுப்பென்று அதே அரசியல் சாசனம் கூறுகிறது. இலங்கையில் பிற மதங்கள் அனுமதிக்கப்பட்டாலும் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த நிலை அவற்றிற்கு வழங்கப்படவில்லை.

கடவுளின் அல்லது அவருடைய மதத் தலைவர்களின் ஆட்சிக்குட்பட்ட நாட்டை அரசியல் விஞ்ஞானம் தியோக்ரசி (Theocracy) என்று வகைப்படுத்துகிறது. இந்த அடிப்படையில் பாப்பரசரின் வத்திக்கான் ஷியா மதத் தலைவர்கள் ஆளும் ஈரான், புத்த மதம் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை என்பன தியோக்ரசிகளாகக் கணிப்பிடப்படுகின்றன.

“தனது அரசியல் சாசனப் பிரகடனப்படி இலங்கை ஒரு ஒற்றை மத ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு” (By its own constitional declaration Sri lanka is a mono religious state) என்று இலங்கையின் அரசியல் ஆலோசகர் தயான் ஜெயத்திலக்கா கூறுகிறார். இவர் பிரான்சிற்கான இலங்கைத் தூதராகப் பணியாற்றுபவர்.

எமது பாரத தேசத்தின் அரசியல் சாசனம் வேறுபட்டது. அது மதத் சமத்துவத்தை வலியுறுத்துவதோடு 80.5 விழுக்காடு இந்து மதத்தினர் வாழும் நாடாக இருப்பினும் ஒரு மதத்திற்கேனும் மேலிடம் வழங்கவில்லை. ஆனால் இலங்கையுடன் கூட்டு வைத்துள்ள இந்தியா மதச் சார்புக் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதாகக் கருதப்படுகிறது.

அண்மைச் செய்திகளின்படி புத்தர் சிலைக்கு முத்தமிட்ட இரு பிரிட்டிஷ் பெண்களுக்கு இலங்கை நீதி மன்றமொன்று சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலடியாகப் பிரிட்டிஷ் அரசு தனது நாட்டுச் சுற்றுப் பயணிகள் இலங்கை செல்லும் போது அந்த நாட்டு நிலவரத்தைப் புரிந்து நடக்கும்படி கேட்டுள்ளது. இதைப் பயணத் தடையாகக் கருதலாம்.

பிரிட்டிஷ் அரசின் இந்த அறிவிப்பால் இலங்கையின் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருவாய் பாதிப்படையும்;. ஜக்கிய இராச்சியத்தைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியமும் இந்த விதமான அறிவிப்பை வெளியிடவிருக்கிறது.

இலங்கை வாழ் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சர்வதேச சமூகத்தை நோக்கி ஒரு முக்கிய கேள்வியைக் கேட்கிறார்கள். இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்த விகாரைகள் வகை தொகையாகக் கட்டப்படும் போது உலக ஒழுங்கின் பாதுகாவலர்களாகிய நீங்கள் என்ன தடுப்பு நடவடிக்கை எடுத்தீர்கள்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் போதெல்லாம் அறிக்கைகள் வீடுவீர்களே தவிர உங்களுடைய கையாலாகாத் தளத்தைக் கைவிட முடிந்ததா.? டம்புல்ல (Dambulla) என்ற மலை அடிவார நகரில் புத்த மதக் குகைக் கோவில்களும் மசூதிகளும் காணப்படுகின்றன. மசூதிகளை அகற்றும் நடவடிக்கையை புத்த பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

இதைத் தடுப்பதற்கு முஸ்லிம் உலகம் (Muslim World) என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதை விடுங்கள், இலங்கை அரசின் அமைச்சரவையில் பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் வாய் திறவாமல் இருப்பதின் மர்மம் என்ன.? சென்னை வாழ் முஸ்லிம் மக்கள் இலங்கை துணைத் தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்திய மத்திய மாநில அரசுகள் டம்புல்லச் சம்பவங்களுக்கு துணை போவதாக முஸ்லிம் மக்கள் கருதுவதில் தவறில்லை. இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்குத் துணை போகும் மேற்கு நாடுகளும் சரி, இந்தியாவும் சரி தமது இலங்கை தொடர்பான கொள்கையை மாற்றினால் தான் ஏதேனும் பலன் கிடைக்கும்.

தமது தேசிய நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் போது மாத்திரம் கண்டன அறிக்கை விடுவதும் பிறகு அனைத்தையும் மறந்து வழமைக்குத் திரும்புவதுமாக நடப்பதால் ஒரு பலனும் இல்லை. உலக நாடுகளின் இயல்பையும் வழமையையும் இலங்கை நன்றாகப் படித்து வைத்திருக்கிறது. அதனால் தான் இலங்கை அரசால் துணிச்சலாகச் செயற்பட முடிகிறது…


[vuukle-powerbar-top]

Recent Post