மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குதண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததால் அஜ்மல் கசாப்புக்கு தூக்குதண்டனை உறுதியாகியுள்ளது. இந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது
"இதுவரையில் கிடைத்த தடயங்கள் ஆதாரங்கள் ஆவணங்களின் அடிப்படையில் அஜ்மல்தான் குற்றவாளி என உறுதியாகிறது, இது முழுக்க பாகிஸ்தானியர்களால் பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக திட்டம் தீட்டப்பட்ட ஒரு தாக்குதலே ஆகும். இது இறையான்மை உள்ள இந்தியாவுக்கு எதிராக அமைந்த போராக நாம் கருதுகிறோம் ஆகவே இவருக்கு மரணதண்டனை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை."
என கூறியிருக்கின்றனர்.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மிக மிக அரிதான வழக்குகளுக்கே தூக்குதண்டனை அளிக்கப்படுவதே மரபாக இருக்கிறது, அத்தகைய அரிதான வழக்காகவே இது இருக்கிறது, தூக்குதண்டனை வழங்க அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஏற்கனவே மும்பை நீதிமன்றம் அஜ்மல் கசாபுக்கு தூக்குதண்டனை விதித்திருந்தது. இதை எதிர்த்து அஜ்மல் கசாப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதே போன்று மும்பை நீதிமன்றம் மும்பை வழக்கில் தொடர்புபட்டிருந்தாக கருதப்படும் அன்சாரி, சௌவ்புதின், அகமது ஆகியோரை அந்த வாக்கில் இருந்து விடுவித்திருந்தது.
அதற்கு எதிராகவும் மகராஷ்டிரா காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த மனுவினை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து அஜ்மல் கசாப் சார்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.