கிரனைட் குவாரி முறைகேடு புகாரில் சிக்கிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தலைமறைவாக உள்ள துரை தயாநிதியின் பாஸ்போர்ட்டை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவிர முறைகேடுகளுக்கு உதவிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கிரனைட் குவாரி முறைகேடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியிருப்பதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று மேலும் சில கிரனைட் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே கிரனைட் முறைகேடு தொடர்பாக 4 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் 6 பேருக்கு மதுரை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை அதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகள் 10 பேருக்கு நேரில் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில் 4 பேர் தற்போது அரசுப்பணியில் பணியாற்றி வருகின்றனர். 6 பேர் ஒய்வு பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் குவாரிகளில் நேரடியாக ஆய்வு நடத்துகின்றனர். முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதிகளில் சட்டவிரோதமாக கிரனைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தனியார் நிறுவன குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.