Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெஹரானில் பிரதமர் மன்மோகன் சிங் ஈரான் அதிபருடன் சந்திப்பு

ஈரான் தலைநகர் டெஹரானில் அணிசேரா நாடுகளின் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் அஹமதி நிஜாத்தை சந்தித்துப் பேசினார்.

இந்தியா – ஈரான் இடையிலான பாரம்பரிய உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங்கும் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத்தும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடை குறித்தும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

120 நாடுகளைக் கொண்ட அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும், சிரியாவில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும், இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை. இந்த மாநாட்டில் மன்மோகன் சிங் பேசும்போது, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்துக்களை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஈரான் வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா தமது நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமரின் ஈரான் பயணத்தை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post