Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக உணர்வை மதித்து சிங்கள ராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்றுக - வேல்முருகன்




இன்று பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை வருமாறு :

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதியிலும் போர்க்குற்றவாளிகளான சிங்கள காடையர்களுக்கு பயிற்சிதரக்கூடாது என்று தமிழக அரசும் அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு, இலங்கை ஒரு நட்பு நாடு என்று நற்சான்றிதழ் கொடுத்திருக்கும் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூவின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது. 

 தமிழக அரசும் தமிழக மக்களும் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்ற போதெல்லாம் தமிழகத்திலிருந்து சிங்கள காடையரை வெளியேற்றி இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த முறையோ அப்படியெல்லாம் அனுப்ப முடியாது.. இலங்கை ஒரு நட்பு நாடு என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ கூறியிருப்பது திமிர்த்தனமானது. 

 இந்தியாவுக்கு நட்பு நாடு என்று கூறிக் கொண்டு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் செங்கம்பளம் விரிப்பது என்பதுதான் சிங்களம் காலங்காலமாக கடைபிடிக்கும் கொள்கையாக வைத்திருக்கிறது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இந்தியா மேற்கொண்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் போட்டியாக சிங்கள ராணுவத்தினருக்கான நிதி உதவிகளை சீனா செய்து வருகிறது. 

வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினரை அங்கேயே நிலையாக குடியேற்றும் வகையிலான குடியிருப்பு திட்டங்களையும் மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்திருக்கிறது. இதனால் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கி தமிழர்களை சிறுபான்மையினராக்கும் உள்நோக்கத்துடன் சீனாவை இறக்கிவிட்டிருக்கிறது சிங்களம்.

இத்தகைய இந்திய விரோத இலங்கைக்குத்தான் மத்திய அரசும் மத்திய அமைச்சர்களும் நட்பு நாடு என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்தும் மத்திய அரசு கடைபிடிப்பதை கைவிட்டுவிட்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் உணர்வுகளை மதித்து சிங்கள ராணுவ அதிகாரிகளை இந்தியாவில் இருந்து உடனேயே வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். 

-தி.வேல்முருகன் நிறுவனர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
[vuukle-powerbar-top]

Recent Post