இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, இந்தியாவின் முக்கிய நகரங்களில் புதிதாக தூதரகப் பிரதிநிதிகளை நியமிக்க இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையிலான இந்தத் திட்டத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் சிறிலங்கா அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
வர்த்தக உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கும், செயற்றிறன் மிக்க வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் வகையிலுமே, இந்தியாவில் புதிய தூதரகப் பிரதிநிதிகளை இலங்கை நியமிக்கவுள்ளது.
இதன்படி, ஹைதராபாத், லக்னோ, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் புதிய தூதரகப் பிரதிநிதிகளை நியமிக்க இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், சென்னை துணைத் தூதரகத்தில் தமிழ்பேசும் அதிகாரிகள் இருவரை நியமித்து, அதன் செயற்பாடுகளை விரிவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, மும்பாய் தூதரகப் பிரதிநிதி பதவிக்கு வெளிவிவகார சேவையில் உள்ள மூத்த இராஜதந்திரி ஒருவரை நியமிக்கவும், அங்கு மத்திய தர பதவி நிலை அதிகாரி ஒருவரை மேலதிக இராஜதந்திர பதவியில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர புதுடெல்லியில் உள்ள தூதரகத்தில் இந்தியாவுடன் இராஜதந்திர பொருளாதார முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் முதன்மையான பதவி ஒன்று உருவாக்கப்படும்.
அதேவேளை, மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான துணைத் தூதரகம் ஒன்றை கொல்கத்தாவில் திறக்கவும் இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இவற்றின் மூலம் வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறை தொடர்பான உறவுகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் நோக்கிலேயே இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.