கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இடிந்தகரை அணு உலை போராளிகள் இந்த தீர்ப்பை பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொறியாளர் சுந்தர்ராஜன், மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படாதவரை, கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் நீரின் வெப்ப அளவு குறைக்கப்படும் என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தி அமைக்கப்பட்ட அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர்.