கொழும்பில் இந்திய - இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் நடந்து வருகின்ற சூழலில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று கொழும்பு வரவுள்ளது.
ஐந்து நாள் பயணமாக இலங்கை வரும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தலைமையிலான இந்தக் குழுவினர் அடுத்தமாதம் 2ம் நாள் வரை இங்கு தங்கியிருப்பர்.
இதன்போது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, கூட்டுப்படைகளின் தளபதி எயர்சீவ் மார்சல் ஹர்ச குணதிலக, முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார் அதிகாரிகள் பலரையும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், சபுகஸ்கந்தயில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி, பனாகொட இராணுவ முகாம் ஆகியவற்றுக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் நாளை செல்லவுள்ளார்.
சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் புதிய நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய – இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டத்தினால் பேச்சுக்கள் கொழும்பில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியாவுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.