Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொழும்பு வந்துள்ள இந்தியாவின் உயர்மட்ட இராணுவ வல்லுனர்கள் குழு


இந்திய – இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கொழும்பில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை இராணுவத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமான இந்த உயர்மட்ட பேச்சுக்களில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் குர்தீப் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கை வந்துள்ளது.

இரு நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான உறவுகள், ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்படும் இந்தப் பேச்சுக்களின் முதலாவது கட்டம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் புதுடெல்லியில் நடைபெற்றிருந்தது.

கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்தப் பேச்சுக்களில் இந்திய இராணுவத்தின் சார்பில் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் குர்தீப் சிங், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை பிரதிப் பணிப்பாளர் பிரிகேடியர் ஹர்ச குப்தா, இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவின் பணிப்பாளர் கேணல் கஜன் தீப், இந்திய இராணுவ பயிற்சி பணிப்பாளர் கேணல் விவேக் தியாகி ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கை இராணுவத்தின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக தலைமையில் இராணுவ பிரிவுகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில்இலங்கை தரப்பில் பங்கேற்கின்றனர்.

பயிற்சி, புனர்வாழ்வு, திட்டமிடல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவாக்கிக் கொள்வது குறித்து இந்த மூன்று நாள் பேச்சுக்களில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் முடிவில் இருதரப்புக் குழுக்களுக்கும் தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படும்.

இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க வந்துள்ள இந்திய படை அதிகாரிகள் குழு, இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, மேஜர் ஜெனரல் குர்தீப் சிங் தலைமையிலான இந்திய இராணுவ உயரதிகாரிகள் குழு நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சு நடத்தியது.

இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ள மேஜர் ஜெனரல் குர்தீப் சிங் கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டுப் போர்முறையிலும், பிரிகேடியர் ஹர்ச குப்தா கிளர்ச்சி முறியடிப்பிலும் அனுபவம் பெற்ற அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post