Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை. கொலை செய்தவரும் பலி


கமுதியில் இன்றுகாலை நிகழ்ந்த சம்பவத்தில் முதுகுளத்தூர் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி வெட்டிக்கொல்லப்பட்டார். வெட்டப்பட்டபோது அவர் போட்ட அலறலில் திரண்ட பொதுமக்கள் கொலையாளியைப் பிடித்து நையப் புடைத்த்தில் கொலையாளியும் அங்கேயே மரணமடைந்ததாகத் தெரிகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 

முதுகுளத்தூர் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி(70) தற்போது கமுதி ஒன்றிய திமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவரது வீடு கமுதியில் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மேட்டுத்தெருவில் உள்ளது. வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கம், கமுதி அருகேயுள்ள மேலராமநதி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இன்று காலை குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மாடியில் இருந்தனர். வெள்ளைச்சாமி மட்டும் வீட்டின் கீழ்பகுதியில் இருந்தார். 

அப்போது முத்துராமலிங்கத்தை பார்க்க வேண்டும் எனவும் மேலராமநதியில் இருந்து வருவதாகவும் கூறிக் கொண்டு ஒருவர் வந்தார். அவர் வெள்ளைச்சாமி முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெள்ளைச்சாமியை சரமாரியாக வெட்டினார். அரிவாள் வெட்டுக்காளான வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். 

வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்தவர்கள் இறங்கி ஓடி வந்தனர். வெட்டிய நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை ஓட விடாமல் மடக்கிப் பிடித்ததுடன், கதவையும் பூட்டிக் கொண்டனர். வீட்டிற்குள்ளேயே வைத்து அவரை சரமாரியாக உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். இதில் அந்த நபரும் இறந்தார். தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர். ஏராளமான திமுகவினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். 

 காவல்துறை கொலையுண்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இதையொட்டி, கமுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தி : இணையதள  திமுக 


[vuukle-powerbar-top]

Recent Post