பூந்தமல்லி அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுவிக்கக் கோரி இலங்கைத் தமிழர் செந்தூரன் கடந்த ஆறாம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, செந்தூரனை நேற்று கைது செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, பூந்தமல்லி நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக்கின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தூரன், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தூரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உரிய சிகிச்சையளிக்காமல் அவரை சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். செந்தூரன் மயக்கமடைந்து இரண்டு மணி நேரம் ஆன பின்னரும் காவல்துறையினர் அவருக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை என்று வைகோ, கண்டனம் தெரிவித்துள்ளார்.
செந்தூரனின் இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு தமிழக அரசு நியாயமான தீர்மானம் எடுக்கும் என்று பலராலும் நம்பப்பட்டுவந்த நேரத்தில் இவ்வாறு பொய் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.