கிரானைட் விவகாரம் தொடர்பாக தனது மகன் துரை தயாநிதியின் கடவுசீட்டை மத்திய அரசு முடக்கவில்லை என மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
காவல்துறையினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். துரை தயாநிதி தொடர்பாக வெளியாகும் செய்திகள் பற்றி அவரது தந்தையும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி புதிய தலைமுறையிடம் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தார்.
தனது மகன் துரை தயாநிதியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அழகிரி குறிப்பிட்டார்.
இந்நிலையில், காவல்துறையினர் வேண்டுமென்றே துரை தயாநிதி பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக மு.க. அழகிரி குற்றம்சாட்டினார்.
குற்றச்சாட்டுகளை துரை தயாநிதி சட்டரீதியாக எதிர்கொள்வார் என்றும் மு.க.அழகிரி புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.