முல்லைப் பெரியாறு அணை தொடர்பான நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கையை தமிழக, கேரள அரசுகளுக்கு 10 நாள்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு, நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய ஆனந்த் குழு மற்றும் நிபுணர் குழுவின் அறிக்கைகள் இரு மாநில அரசுகளுக்கும் வழங்கப்படாதது குறித்து நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், அறிக்கைகள் சீலிடப்பட்ட உறையில் இருப்பதால், அதை வெளியில் எங்கும் பிரதி எடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற பதிவாளர் அறையிலேயே அறிக்கைகளை பிரதியெடுத்து, சி.டி. வடிவில் இரு மாநில அரசுகளுக்கும் 10 நாள்களில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வரும் அக்டோபர் 5-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.