கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் கைவிடப்பட்ட வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த தியாகராஜா யோகசீலன் என்ற 29 வயதுடைய இளைஞன் காயமடைந்திருக்கின்றார்.
வெடித்துச் சிதறிய துண்டுகள் பாய்ந்ததில் இரண்டு தொடைகளிலும் காயமடைந்து இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். கிளிநொச்சியில் உள்ள ஐநா நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகின்றார்.
அவர் வசித்து வருகின்ற வீட்டின் முற்றத்தைக் கூட்டி குப்பைகளை எரித்தபோது குப்பையுடன் கிடந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்தனாலேயே இவர் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கனகாம்பிகைக்குளம் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அந்தப் பிரதேசம் பாதுகாப்பானது என அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையிலேயே இன்று இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதியிலும் இத்தகைய வெடிப்பொருட்கள் கிடந்து வெடிப்பது குறித்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மத்தியில் கவலையும் அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.