பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட சிறப்பு குழுக்களை உருவாக்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பா.ம.க.வின் புதுவை மாநில செயலாளர் அனந்தராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் தற்போது பன்றிக்காய்ச்சல் நோய் பரவி வருவது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.
நமது பக்கத்து மாநிலமான தமிழகத்தில் 120பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பக்கத்து மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் 3பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனால் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் நோய்க்காக சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே நமது புதுவை மாநிலத்திலும் இந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது.
பன்றிக்காய்ச்சல் நோயை கண்டறிவதற்கான வசதிகள் நம் புதுவை மாநில அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் புதுவை அரசு தீவிரமாக ஈடுபடவேண்டும்.
இதற்காக சிறப்பு குழுவை உருவாக்கவேண்டும். அரசு மருத்துவமனைகளிலும், சுகாதார நிலையங்களிலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவுகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்கவேண்டும்.
பொதுமக்கள் மத்தியிலும் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும். பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி புதுவைவாழ் மக்கள் நலனை பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அனந்தராமன் கூறியுள்ளார்.