புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து காலாப்பட்டில் மீனவர்களின் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் புயல் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சில இடங்களில் இன்னும் வழங்கவில்லை என்றும், மேலும் பல்வேறு இடங்களில் சில பேருக்கு விடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் புதுவை சின்னகாலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பகுதியில் வசிக்கும் மீனவ பகுதிகளில் சேதம் அடைந்த படகுகளை முறையாக கணக்கெடுப்பு நடக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு பாதி நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை கண்டித்தும் சிங்காரவேலர் மன்றம் மற்றும் உழவர்கரை மாவட்ட மீனவர் அணி சார்பில் மீனவர்களின் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, சின்னக்காலாப்பட்டு மற்றும் பெரியகாலாப்பட்டு மீனவ பகுதிகளில் வீடுகளின் முன்பு நேற்று கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மேலும் சிங்காரவேலர் நற்பணி மன்றத்திலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.