புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர விரும்புவோர்அதற்கான விண்ணப்பத்தை கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.
தமிழக அரசின் சார்பில் செயல்படும் முதல்-அமைச்சரின் இலவச விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி முதல் தமிழக மக்களின் மருத்துவ பாதுகாப்பை ஏற்படுத்தும் பொதுநோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.11/2 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் 1,016 நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பயன்பெறும் வகையில் அமைந்து உள்ளது. கூடுதலாக 113 தொடர் சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கி உள்ளது. 23 வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யும் செலவுகளை ஈடுகட்டும் வகையிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற திட்டமாக இது உள்ளது. கோவை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த நிலையில் இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பழைய மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வைத்து உள்ளவர்களுக்கு, புதிதாக அடையாள அட்டைகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை பழைய அடையாள அட்டைகளுக்கு பதிலாக சுமார் 50 ஆயிரம் புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 40 ஆயிரம் அடையாள அட்டைகள் வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது.
புதிதாக காப்பீட்டு திட்டத்தில் சேர விரும்புவோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்டத்தில் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் வருமானம் கணக்கிட்டு சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அடையாள அட்டையில் குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டும் இருக்கும்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம் கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பழைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரம் அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.