முதல்வர்கள் மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லத்தில் இன்று பிற்பகல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் இன்று காலை உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு தொடங்கியது. இதில் ஜெயலலிதா பங்கேற்றார்.
இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் தமிழ்நாடு இல்லம் திரும்பும் அவரை மோடி, பட்நாயக், பாதல் ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது என்ன பேசப்படவுள்ளது என்பது குறித்துத் தெரியவில்லை. தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் உள்பட மாநில அரசுகளைப் பாதிக்கும் பல்வேறு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் சந்திப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.