முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்புபடுத்தப்பட்டு்ள்ள ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் பற்றிய தகவல்களை தருமாறு 4 நாடுகளுக்கு சிபிஐ நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
சிபிஐயின் கோரிக்கையை ஏற்று இந்தக் கடிதங்களை நீதிமன்றம் கடந்த வாரம் அனுப்பியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததன் மூலம் 547 கோடி ரூபாய் அளவுக்கு தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் பலனடைந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த பணம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கருதப்படும் பிரிட்டன், பெர்முடா, மலேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய 4 நாடுகளுக்கும் சிபிஐ நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
பணப் பரிமாற்றம் பற்றிய விவரங்களை தருமாறு அந்த நாடுகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது பெர்முடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் சிபிஐ விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மலேசியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் சிபிஐ தனது விசாரணையை நடத்தி முடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவருடைய சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நிறுவனத்திற்கு விற்கும்படி தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது நினைவுகூறத்தக்கது. இந்த விவகாரத்தில் இந்த மாத இறுதியில் மாறனிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.