தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருக்கவில்லை. தமிழர்களின் துயரம் சிங்கள மக்களுக்குத் தெரியாது. தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் அவர்கள் தடையாக நிற்க மாட்டார்கள் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் லாப நோக்கங்களைக் கொண்ட அரசியல்வாதிகளே இனப்பிரச்சினையைத் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை. தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையான சிஙகள மக்களுக்கு தெரியாது.
அரசியல் லாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டி விடுகின்றனர். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அவர்கள் தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசியல் மேடைகளை தெரிவித்த தமக்கு தேர்தல்களில் பாரியளவு வெற்றி கிட்டியதாகவும், சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வினை எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இன்மையே பிரச்சினைகளுக்கான காரணம். யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், ஏன் அவர்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சந்திரிகா,
இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியம் என்பதனை ஒப்புக் கொள்வதாகவும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவில் படையினரை குவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.