புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் 10-ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்டம் செய்தார் என்பது புகார்.
இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின்போது கல்யாணசுந்தரத்தின் கையெழுத்தின் மாதிரி பெறப்பட்டது.
புகாருக்குரிய தாளில் இருந்த கையெழுத்துடன் இதனை பரிசோதிக்க சென்னை தடவியல் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவு அறிக்கை திண்டிவனம் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இரண்டு கையெழுத்துகளும் ஒரே மாதிரி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதனால் கல்யாணசுந்தரம் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்று நிரூபனமானது. இதைத் தொடர்ந்து கல்யாணசுந்தரத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.