கோவை விமான நிலையத்துக்கு போலி பாஸ்போர்ட்டில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பாஸ்போர்ட் எடுப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் ஆன் லைன் மூலமும் நேரிடையாகவும் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சரியான ஆவணங்கள் இருநதால் மட்டுமே ஒருவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கும். இல்லையென்றால் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்காது. இத்தகைய ஆன்லைன் பரிசோதனை கடந்த 10 ஆண்டுகளாக தான் நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் உள்ள நவீன எந்திரத்தில் ஒருவருடைய பாஸ்போர்ட்டை ஸ்கிராட்ச் செய்தால் அவருடைய முழு விவரமும் கம்ப்ïட்டரில் வந்து விடும்.
ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பதாரர்கள் கொடுக்கும் ஆவணங்களை அடிப்படையாக கொண்டு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால் தவறான, போலியான ஆவணங்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.
ஆனால் அப்படி போலியாக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தாரர்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக போலீசில் சிக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் இதில் அதிகம் சிக்குகிறார்கள்.
இதற்கு காரணம் இந்தியாவிலேயே வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளில் தான் வேலை பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் வேலை கிடைக்கிறது என்பதற்காக கேரளாவை சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு போலியான முகவரி அதாவது தமிழ்நாட்டில் வசிப்பதாக கூறி போலியான ஆவணங்களை தயார் செய்து பாஸ்போர்ட் பெற்று விடுகிறார்கள்.
இவர்கள் சென்னை, திருச்சி, கேரளாவில் உள்ள எந்த விமான நிலையத்தில் வந்தாலும் அங்கு சிக்கி கொள்கிறார்கள் என்பதற்காக கோவை விமான நிலையத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இங்குள்ள குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கறாராக இருப்பதால் போலி பாஸ்போர்ட்தாரர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.
கேரளாவை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக கூறி எப்படி பாஸ்போர்ட் எடுக்க முடியும் என்று அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் போலீசில் சிக்கி கொள்கிறார்கள். கோவை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த அப்துல் கபூர் (வயது 44) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக கூறி நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.