இந்தி எதிர்ப்பால் தமிழகம் இழந்தது என்ன?
சமீப காலங்களில் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றிருப்பவர்கள் மேலே படத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்திருப்பீர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நடுவண் அரசு இந்தியை தமிழகத்தில் மென்மையாக பரப்புரை செய்வதைத் தான் இந்தப் பதாகை உணர்த்துகிறது. எத்தனை ஆண்டுகளாயினும் இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்பதில் நடுவண் அரசு உறுதியாகத்தான் இருக்கின்றது. இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை தமிழர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தனர் அன்று. இன்று?
இன்று இந்தி எதிர்ப்பைப் பற்றி பேசும் பொழுது தமிழர்களில் பெரும்பாலானோர் கூறுவது “ஆமாம், இந்தியைப் படிக்காதே என்று ஊருக்கு சொல்லிவிட்டு, தன் வாரிசுகளை எல்லாம் இந்தியைப் படிக்க வைத்து நடுவண் அரசில் அமைச்சர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள், நாம் தான் அவர்கள் பேச்சைக் கேட்டு மோசம் போனோம்!”. மக்களின் இந்த விரக்தியில் உண்மையில்லாமல் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியை கடுமையாக எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) பின்னர் படிப்படியாக இந்தியை ஏற்றுக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் இந்தி பேசுபவர்களின் வாக்குகளைக் கவர சென்னையிலேயே இந்தியில் பதாகைகள் வைக்கும் அளவிற்கு அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
தி.மு.க.வின் இந்த மாற்றத்தால் மக்கள் அடைந்திருக்கும் விரக்தியில் தமிழர்கள் இந்தியை இன்று எளிதாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. கடந்த கால இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வை மட்டுமே சார்ந்திருந்திருந்தால், இன்றைய சூழ்நிலையில் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தி எதிர்ப்பும் பலவீனமடைந்த நிலையில் தான் இருக்கவேண்டும். ஆனால் வரலாற்றைப் பார்க்கையில், இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.க.வின் கட்சிப் போராட்டம் போன்றல்லாமல் ஓட்டு மொத்த தமிழினத்தின் போராட்டமாகத் தான் இருந்திருக்கிறது.
அனைத்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் பெரியார் முன்னின்றிருக்கிறார். ஆயினும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குகான முதல் அமைப்பு (Anti Hindi Command) 1938 இல் தொடங்கப்பட்ட பொழுது அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோமசுந்தர பாரதியார். அதே போன்று முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு கோடம்பாக்கத்தில் நடத்தப்பட்ட பொழுது அதன் தலைவராக இருந்தவர் மறைமலை அடிகளார். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் போன்ற சான்றோர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் போராடியே இந்தித் திணிப்பைத் தடுத்திருக்கின்றனர். கட்சி, மதம், சாதி அனைத்தையும் கடந்து தமிழர்கள் ஒரே குரலில் இந்தியை எதிர்த்ததாகத்தான் வரலாறு காட்டுகிறது. ஆகவே தி.மு.க.வின் மீதான விரக்தியில் தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடைமுறையில் உண்மையாகாது.
தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தி ஆதரவாளர்களால் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் முதலாவது இந்தி நமது தேசிய மொழி, ஆகவே இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்கவேண்டும் என்பது. நமது அரசியலமைப்புப்படி நமக்கு தேசிய மொழி ஏதும் இல்லை. 2009 ஆம் ஆண்டு சுரேஷ் கச்சாடியா என்பவர் தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதி மன்றம் இந்தியாவிற்கு தேசிய மொழி ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கின்றது. இருப்பினும் பெரும்பாலானோர் இந்தியை தேசிய மொழியாகத்தான் பார்க்கிறார்கள். நடுவண் அரசும் மிகக் கவனமாக “ராஜ பாஷா” என்றே இந்தியை பரப்புரை செய்கின்றது.
இந்தியா முழுவதும் மக்கள் ஒரே மொழியில் உரையாடினால் மக்களுக்குள் ஒற்றுமை வளரும், இந்தியா வலுப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் பலர் இந்தியை ஏற்றுக்கொள்வது பயன்தரும் என்கின்றனர். ஒரு நாடு ஒரு மொழி என்ற கருத்தில் இவர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒரு நாடு ஒரு மொழி என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் ஆபத்தான கருத்தாகும். ஒரு நாடு ஒரு மொழி என்றிருப்பது, பின்னர் ஒரு நாடு ஒரு இனம் என்று மாறினால், இட்லரின் ஜெர்மனியைப் போன்று ராஜபக்சேயின் இலங்கையைப் போன்று இந்தியாவை மாற்றிவிடும். மொழியைத் திணிப்பதன் மூலம் எதிர்கருத்துக்களும், வன்முறையும், தீவிரவாதமும், பிரிவினையும் வளரும். இந்தியாவின் தனிச் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை தான். ஒரு நாடு ஒரு மொழி என்பது வேற்றுமையில் ஒற்றுமைக்கு முற்றிலும் எதிர்ப்பானதாகும். ஒரு நாடு ஒரு மொழி என்பவர்கள் தங்களை அறியாமலே இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க துணை போகின்றனர்.
இந்தி கற்றுக்கொள்வதால் தமிழர்கள் பொருளாதார மேன்மை அடைய முடியும், தமிழகம் சிறந்த மாநிலமாக முன்னேற்றம் அடைய முடியும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இக்கருத்தை பரிசோதித்து பார்க்க தமிழகத்தையும் இந்தி பேசும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை காட்டும் மனித வளர்ச்சி குறியீடு (Human Development Index – HDI) தமிழகத்தில் 0.675 ஆக உள்ளது (இந்திய மாநிலங்களில் பத்தாவது இடம்). இதே குறியீடு உத்திரப் பிரதேசத்தில் 0.490 ஆக உள்ளது (இந்திய மாநிலங்களில் 25 ஆவது இடம்).
தனிநபர் உற்பத்தித் திறன் (GDP Per Capita) தமிழகத்தில் 66,000 ரூபாயாக இந்தியாவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதே தனிநபர் உற்பத்தித் திறன் உத்திர பிரதேசத்தில் 24500 ரூபாயாக இந்தியாவில் 26 ஆவது இடத்தில் உள்ளது.
கல்வியறிவிலும் தமிழகம் 80.3 விழுக்காட்டுடன் இந்தியாவில் ஏழாவது இடத்திலும், உத்திரப்பிரதேசம் 69.7 விழுக்காட்டுடன் இந்தியாவில் 22 ஆவது இடத்திலும் இருக்கின்றது.
இவை தவிர்த்தும் மேலும் பல புள்ளி விவரங்களைப் பார்க்கையில், தமிழகம் இந்தியாவின் முதல் சில மாநிலங்களுக்குள்ளும், உத்திரப்பிரதேசம் கடைசி சில மாநிலங்களுக்குள்ளும் இருப்பது தெளிவாகிறது. இந்த விவரங்களைப் பார்க்கையில் உத்திரப்பிரதேசம் இந்தியால் எதையும் பெரிதாக பெற்றுவிடவில்லை என்பதையும், தமிழகம் இந்தி எதிர்ப்பால் எதையும் இழந்து விடவில்லை என்பதையும் காண முடிகிறது.
இந்தி தெரியாததால் வட மாநிலங்களில் தமிழர்கள் வேலைக்குச் செல்வது சிரமமாக உள்ளது என்றும் அவ்வாறு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் இந்திக்கு ஆதரவான கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழர்கள் பெருமளவில் வடமாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாய் இருக்கின்றது. பெருமளவில் இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கின்றனர். வட மாநிலத்திற்குச் சென்று குடியேறும் தமிழர்கள் அவசியம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மிகக் குறைந்த செலவில் இந்தியை கற்றுக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. வடமாநிலத்திற்கு சென்று குடியேறும் தமிழர்கள் மிகக் குறைந்த விழுக்காட்டிலானவர்களே. இவர்களுக்காக இந்தியை பள்ளியில் பாடமாக்க வேண்டும் என்பது, அரபு நாட்டிற்கு அதைவிட அதிகமானோர் வேலைக்கு செல்வதால் அரபு மொழியை பள்ளியில் பாடமாக்க வேண்டும் என்பதைப் போன்றது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வட்டிக்கடைக்காரர்களும், உழைப்பாளர்களும் அவர்களது பள்ளிகளில் தமிழைப் படித்து விட்டு வருவதில்லை. யாராயினும் வாழும் இடத்திற்கேற்ப மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். அது பள்ளி வாயிலாக இருக்க வேண்டும் என்பது பொதுவான தீர்வாகாது.
கூடுதலாக ஒரு மொழி கற்றுக்கொள்வது நல்லது தானே, அதை எதற்கு எதிர்க்க வேண்டும் என்றும் இந்தி பரப்புரைக்கு ஆதரவான வாதங்கள் வைக்கப்படுகின்றன. கூடுதலாக மொழி கற்பது மிகவும் பலனானது. பல மொழிகள் கற்கும் குழந்தைகளுக்கு சிந்தனை திறன் கூடுதலாக உள்ளதை ஆராய்ச்சியில் நிரூபித்திருக்கின்றனர். ஆகவே கூடுதல் மொழி கற்பதை அவசியம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் மூன்று மொழிக் கல்வியைக் கொள்கையாக வைப்பதை வரவேற்கலாம். முதல் மொழி உள்ளூர் மொழியாகவும், இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது மொழியாக இந்தியாவின் அனைத்து மாநில ஆட்சி மொழிகளையும் கற்க வாய்ப்பளிக்க வேண்டும். இத்திட்டம் அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் பெரும்பயனளிக்கும். இடம் பெயர்ந்தாலும் அவரவர் மொழிகளை கற்றுக்கொள்ள இத்திட்டம் உதவிடும். ஆனால் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை மட்டும் அனைவரும் கற்க வேண்டும் என்பது நியாயமற்றது, சர்வாதிகாரமானது.
இந்தியை எதிர்ப்பவர்கள் அந்நிய மொழி ஆங்கிலத்தை வரவேற்கிறார்கள், நம் தேசிய மொழியை எதிர்க்கிறார்கள், இவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற கருத்தும் சில நேரம் தமிழர்களைப் பார்த்து வீசப்படுகிறது. இது அறிவு பூர்வமான வாதமல்ல, உணர்ச்சி வேகத்தில் இந்தி ஆதரவாளர்கள் அள்ளித் தெளிக்கும் வார்த்தைகளே. அந்நிய மொழியை தமிழர்கள் மட்டும் ஆதரிக்கவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் தான் ஆங்கிலத்தை ஆதரித்து கற்றுவருகின்றது. வட மாநிலங்களில் இந்தி படிக்கும் குழந்தைகள் அனைத்தும் ஆங்கிலத்தையும் பள்ளியில் படிக்கின்றனர். தமிழ்க் குழந்தைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் பள்ளியில் படிக்கின்றனர். இப்படி இந்தியா முழுவதும் குழந்தைகள் பொதுவாக ஆங்கிலம் படிக்கையில் இன்னொரு பொது மொழி தேவையற்றதாகின்றது. ஒருவளை இந்தி பேசுபவர்கள் அனைவரும் முடிவெடுத்து ஆங்கிலத்தை முற்றிலும் கைவிட்டால், பின்னர் ஒரு பொது மொழிக்கான தேவை உருவாகலாம். இந்தியை பொது மொழியாக்க முயல்பவர்கள் தங்களது கோரிக்கையை வலிமையாக்க முதலில் வடமாநிலத்தினரை ஆங்கிலத்தை துறக்க வைக்க வேண்டும்.
இந்தியை எதிர்த்ததால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர்கள் இழந்ததேதும் இல்லை என்பது இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்களுக்கு எந்த சிறப்பும் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை நிரூபித்துவிட்டது (Modus tollens தத்துவம்). தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதால் இந்தி பேசும் மாநில மக்களுக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதாக தெரியவில்லை. இருப்பினும் நடுவண் அரசு தொடர்ந்து இந்தியை பல கோடி ரூபாய்கள் செலவழித்து பரப்பி வருவது யாருக்காக?
நன்றி சாகுல் அமீது
- சிறகு.காம் www.siragu.com